Friday, November 6, 2009

கடைசி இரவு - சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக III...

இது துயிலற்று கனவு காணும் எனது கடைசி இரவாய் இருந்து விட்டு போகட்டும். குளியலறையில் குழாய் சொட்டு சொட்டாய் நீர் சிந்தும் சத்தம்... ஏன், என் அறைக் கடிகாரத்தின் நொடி முள் சத்தம் கூட எனக்குத் தெளிவாய் கேட்கிறது. இதுவரை இப்படி நான் இருந்திருக்கிறேனா. யோசித்துப் பார்க்க்கிறேன். நான் ஒரு ராணீத்தேனீயின் பின்னாலே செல்லும் வேலைக்காரத்தேனீயாகத் தான் இருந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் எல்லா இடங்களிலும் ஏதோ ஒன்றை எவரோ ஒருவரை பின் தொடர மட்டுமே முற்பட்டிருக்கிறேன். எனக்கு தேவையா இல்லையா, எனக்கு தெரியாது. அது யாரோ ஒரு அவனிடத்தில் இருக்கிறது அல்லது அவனுக்கு கிடைத்திருக்கிறது. எனக்கும் வேண்டும். ஏன்? இந்த கேள்வியை கேட்டுக் கொள்ள நான் ஏன் எப்பொழுதுமே முற்பட்டதில்லை, இல்லை இப்பொழுது ஏன் முற்படுகிறேன். இருபத்து ஏழு ஆண்டுகளாய் எனக்குள் இல்லாத ஒரு கேள்வி. இன்று ஏன்..? எனது கைப்பேசியை எடுத்துப் பார்க்கிறேன். மணி 11.47. இன்னும் 4 மணி நேரம் மூன்று நிமிடங்கள். என்ன செய்ய?

"5 மணிக்கு கல்யாணம், தூங்காம என்ன பண்றவ?" பாட்டி முனகிக்கொண்டே கடக்கிறாள். நினைக்கையிலேயே எங்கோ ஏதோ இனிக்கிறது. இத்துணை நாளாய் நான் கட்டிக்காத்த மொத்த பெண்மையும் கரை/றையப் போகும் பொழுதுக்கு இன்னும் சில மணி நேரம்தான். முன்பின் தெரியாத ஒருத்தனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எனது 23 வருட கொள்கையெல்லாம் காற்றில் பறக்க விட்டு மூன்று மாதத்தில் எப்படி ஆக்கிரமித்து விட்டான். என்னுடைய மொத்த ரசனையும் மாறியல்லவா போய் விட்டது. அந்தக் குறுஞ்செய்தி... அய்யோ அய்யோ. நினைக்கும் பொழுதெல்லாம் வெட்கத்தில் என்னையும் அறியாமல் எப்படி சிவந்து போகிறேன். மீண்டும் என் கைப்பேசியை எடுத்து அதைப் படித்துப் பார்க்கிறேன். "உன் இடையின் பக்க...." ச்சீய். எத்தனை ரசனைக்காரன் அவன். என்னையும்தான் எவ்வளவு மாற்றி விட்டான். தமிழின் இரண்டாம்தர பாடல்களுக்கும் புத்தகங்களுக்கும் ரசிகையாய் இருந்த என்னை கர்னாடக சங்கீதத்தில் கரைந்து போகும் ஒரு ஜீவனாய் அல்லவா மாற்றி விட்டிருக்கிறான்.

"வாழ்வின் இத்துணை முக்கியமான.." நினைக்கும் பொழுதே சிரிப்புதான் வந்தது. வாழ்வா. அது அற்றுப் போனதாகி விட்டது. நாளைக் காலை வரை நான் இருந்தால் அது முக்கியமானதாய் மாறி இருக்கலாம். இன்னும் சில மணி நேரம்தான். முக்கால் பாகம் நிறைந்து விட்ட என் வாழ்வின் கோப்பையை மரண மது நிறைத்து விட போகிறது. இந்த கடைசி இரவின் சுகந்தங்களை முழுதுமாய் உணர்ந்து விட்டு அதனை செய்து விட வேண்டியதுதான். அவள் இதை நினைத்து கவலைப்படுவாளா. பட்டால் படட்டும். ஒரு நாளோ ஒரு வாரமோ ஒரு மாதமோ. அதற்கு மேல் என்ன... அவளாவது நல்லா இருக்கட்டும்.

அவன் என் கணவன் என்பது விதிக்கப்பட்டதாய் இருக்கலாம், என் காதலனானது என்னையும் அறியாமல் நடந்தேறிப் போனது. இருக்கட்டும் இருக்கட்டும். நாளை இரவின் இந்த நேரத்திற்கெல்லாம்.. உடலெங்கும் பரவி இன்பமூட்டும் மார்கழி மாதத்தின் அதிகாலை குளிரைப் போல் அவன் உடலெங்கும் பரவித் திளைக்கப் போகிறேன். அவனை எதுவுமே சொல்லவிடப் போவதில்லை. இனி என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பொழுதும்... நினைக்கயிலேயே மூச்சு முட்டுகிறது.


"வேறு வழியே இல்லையா? இன்னைக்கு இத பண்ணிதான் ஆகனுமா?" இந்தக் கேள்வியை இன்னும் ஒரு நான்கு முறை கேட்டால் என் மனது மாறினாலும் மாறி விடலாம். ஹ்ம்ம்ம், இந்த நிலையில் மனது மாறுவதற்கு நான் கோழையும் அல்ல, முட்டாளும் அல்ல. இரண்டாண்டுகள் எத்தணை கஷ்டப்பட்டு தெருத்தெருவாய் அலைந்து வேலை தேடியிருப்பேன். "தண்டசோறு, உதவாக்கரை,இவனுக்கு பொது அறிவும் கணித அறிவும் கம்மிடா" எத்தணை பேரின் எத்தணை விதமான பேச்சுக்கள். என்னாலும் முடியும் என்று நிரூபித்து வாங்கிய வேலை. இரண்டாண்டுகள் அமைதியான வாழ்க்கையும் தேவையான பணமும் கொடுத்த வேலை. மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்கிறது "நீங்கள் நாளையிலிருந்து அலுவலகம் வரத் தேவையில்லை... தேவையில்லை...தேவையில்லை... இந்த நிலையில் எப்படி???" இதையெல்லாம் யோசித்து யோசித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. போதும். 4 மணிக்கு சரியாய் முடித்து விட வேண்டும். எண்ணிப்பார்க்கிறேன், 24 மாத்திரைகள். சரியாய் 5 மணிக்கு நான் அண்டவெளிகளில் பிராயணப்பட்டிருப்பேன். எல்லாம் தாண்டி போகப்போகிறேன். கடைசி சிறிது நேரம் மனம் சுத்தமாகட்டும். எனது கணிப்பொறியிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயின் அடியு ஆட்டம்ன்
காற்றோடு காற்றாய் கறையத் தொடங்குகிறது.

குளித்து விட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதற்குமுன் அவனுடன் ஒருமுறை அலைபேசலாமா? வேண்டாம் வேண்டாம். அவன் தான் சொல்லியிருக்கிறானே "கடைசி 5 நாட்களாவது பேசாமல் இருப்போம். தீபாவளி நாளின் பட்டாசு வெடிக்கும் கணங்களுக்காக காத்திருக்கும் ஒரு சிறுவன்/சிறுமியின் எதிர்பார்ப்போடு நாமும் நம் திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருப்போம்..." அவனாகவே அழைத்தால் பேசலாம். இருக்கட்டும்... இனிமேல் எங்கே போய்விடப் போகிறான். உன் வாழ்நாளும் எனதோடுதானே....

ஒன்று, இரண்டு, மூன்று... இருபத்தி நான்கு. படுக்கைக்கு செல்கிறேன். நான் இந்த அண்டவெளியில் கரைந்து பேரின்பம் பெறப் போகும் நொடிகள், இதோ இதோ.. காலையில் எல்லோரும் தேடுவார்கள்... எங்கே எங்கே... அவளுக்குத் தெரிந்தால்... ம்ம்ம்ம்... தேடுவார் தேடி விட்டு போகட்டும். எனக்கு இப்பொழுது என்னவோ செய்கிறது. என்னென்னவோ செய்கிறது...


"என்னப்பா இது... முகூர்த்தத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு? எங்கப்பா உங்க நண்பன்? இந்த நேரத்துல எங்க போனான்?" வெளியே கேட்பது அவன் தந்தையின் சத்தம்தான். காணோமா.. எங்கே போயிருப்பான் இந்த நேரத்தில்... வித்தியாசன்... அதீத வித்தியாசன்... எங்காவது ஏதாவது செய்து கொண்டிருப்பான்... "போன் பண்ணுங்கப்பா... போன் பண்ணுங்கப்பா... வெட்டிப்பய, இந்நேரத்துல எங்க சுத்த போனான்.." அவன் தந்தையின் சத்தம். "நடு ராத்திரி வரைக்கும் இங்கதான் இருந்தான்ப்பா.. பக்கத்துல தான் எங்கயாவது போயிருப்பான். நாங்க பாக்குறோம்... நீங்க போங்கப்ப"


"நர்ஸ்... என்னாச்சு.. என்ன கேஸ்... இப்படி திடீர்னு எதுக்கு வர சொன்னிங்க. " அந்த மிகப்பெரிய ஆஸ்பத்திரியின் ட்யூட்டி நர்ஸைப் பார்த்துக் கேட்டார் டாக்டர்.

"இல்ல டாக்டர்... ஒரு கேஸ்... ரொம்ப இளைஞன்... சாப்ட்வேர் இஞ்சினியர்னு சொன்னாங்க... ஸ்லீப்பிங் பில்ஸ்... அரைமயக்கத்துல வயித்தப் பிடிச்சுட்டு கத்திகிட்டு இருந்தான்னு ஒரு லாட்ஜ்ல இருந்து போன் பண்ணி, ஆம்புலன்ஸ் கூப்பிட்டு அட்மிட் பண்ணிருக்காங்க... ஸாரி டாக்டர்... ரொம்ப இளைஞன்... அதான் நீங்க வந்த்தீங்கன்னா கண்டிப்பா காப்பாத்திடலாம்னுதன்... ஸாரி டாக்டர்..."

"இட்ஸ் பைன்... வேகமாப் பாக்கலாம்... ட்ரிப்ஸ் போடுங்க... வாமிட் பண்றதுக்கு சொல்யூஷன்... எல்லா ஏற்பாடும் பண்ணுங்க... ஹரி அப் ஹரி அப்."
பல்ஸ் பார்த்தால் அரை நார்மலாகத் தான் இருக்கிறது. எத்தணை இளைஞன். கோழை. இந்த சாப்ட்வேர் ஆளுங்கெள்லாம் சைக்கோ ஆகி விடுகிறார்களா.. என்ன.. கோபாமாக வந்தது டாக்டருக்கு.

"சொல்யூஷன் பீட் பண்ணுங்க... ஸ்பீட்.. ஸ்பீட்.. "

"ஆச்சு... 5 நிமிஷம் ஆச்சு... அவனை அப்படியே தலையை முழுதுமாய் கவிழ்த்து வாந்தி எடுக்க வையுங்கள்... இன்னும் இன்னும் கவிழுங்கள்... வாந்தி மூச்சுக்குழாயில் நுழைந்தால் பேராபத்து..."

"டாக்டர்... இப்பொ பல்ஸ் ரேட் கொஞ்சம் நார்மலா இருக்கு..."

"ஆகட்டும்... இன்னும் ஒரு அரை மணியில் அவன் கண்விழிப்பான். ஒரு கிளாஸ் தண்ணில 3 டீஸ்பூன் ஆக்டிவேட்டட் பவுடர்ட் சார்கோல் கலந்து குடுங்க. அவன் ஐ.டி கார்ட்ல இருக்க கம்பெனிக்கு கால் பண்ணி அவன் வீட்டுக்கு தகவல் சொல்ல ஏற்பாடு செய்யுங்கள்.."


"என்ன இது... எங்கே போனான்... 5 மணி ஆச்சு... காணவில்லை.. கைப்பேசியில் அழைத்தாலும் தொடர்பு இல்லை..." படபடக்கத் தொடங்கியது எனக்கு.. மண்டபத்தில் இரு வீட்டுப் பக்கமும் பரபரப்பு.. "கல்யாணத்தன்னிக்கி லெட்டர் எழுதி வச்சுட்டு ஒடிட்டேன்னா என்ன பன்னுவ?" அவன் கேட்டதெல்லாம் விளையாட்டுக்காகவே விளையாட்டுக்காக மட்டுமே இருக்க வேண்டும். மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. "கடவுளே! ஏன் இப்படி? இங்கே தான் இருந்தேன் என்று ஓடி வந்து என்னை ஆரத்
ழுவிக் கொள்ள கூடாதா... ஐயோ.." 'மன்மதனே நீ காதலன் தான்' - எனது அலைபேசிதான். தெரியாத எண். அவனாக இருக்குமோ... இருக்க வேண்டும்... எடுக்கிறேன்...

"ஹலோ... புதுபொண்ணு... நா அனு பேசுறேன்டி... ஸாரிம்மா... கல்யணத்துக்கு வர முடியல... அட்வான்ஸ்டு விஷ்ஸஸ்மா"
அடச்சே... "தேங்க்ஸ்டி..." சுரத்தில்லாமல் சொல்லி விட்டு வைக்கிறேன்.
ஒருவேளை அவன் எங்காவது போய் ஏதாவது ஆகியிருக்குமோ. ஆக்ஸிடென்ட்.. "ச்சே... எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது?? கடவுளே அவன் வர வேண்டும்" கைப்பேசியில் அழைக்கிறேன். மீண்டும் தொடர்பு இல்லை... என் கண்கள் கலங்குவதை என்னாலும் தடுக்க முடியவில்லை.


"யேய்... எதுக்கு இப்படி பண்ண?" அரைகுறையாய் கேட்கிறது. யாரோ வெள்ளை உடையில் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை வானத்து தேவதைகளாய் இருக்கலம். நான் தான் இறந்து விட்டேனே. "பளார்... பளார்" இரண்டு அறைகளில் நிலை மாறுகிறது. கண்கள் இப்பொழுது நண்றாய் தெரிகிறது. யார் இந்த குண்டுப்பெண். புரிகிறது... நான் பிழைத்து விட்டேன். ஐயோ... நான் பிழைத்து விட்டேன்.
"செத்துட்ட டா கிட்டத்தட்ட... இப்ப நீ பொழச்சுருக்குறது பெரிய விஷயம்..." அவளை வெறித்துப் பார்க்கிறேன்.
"உன் வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு... எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க..."
ஐயோ... நான் அவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன். ஐயோ... ஐயோ... ஐயோ... எவ்வளவு கேவலமானவனாய் ஆகிப் போனேன்.

ஏதோ வண்டிச்சத்தம் கேட்கிறது... கல்யாணத்திற்கு அனைவரும் வரத்தொடங்கி விட்டார்கள் போலும். அவன் மட்டும் இல்லாமலோ வராமலோ போனால்... நினைக்க நினைக்க மனது.
"நா சொல்றத கேளுங்க... தயவு செய்து..." உற்றுக் கேட்கிறேன். இது அவன் குரல்தான். வந்து விட்டானா. கதவு திறந்து கண்ணீரை மரைத்து வெளியே செல்கிறேன்....

"ரொம்ப சின்ன வயசுப் பையன்... சூசயிட் அட்டெம்ட்... நீங்க வந்தா காப்பாத்தலாம்னு சொன்னாங்க... போய் கேஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர கொஞ்ச நேராயிடுச்சு... ஸாரி ஸாரி..."

"ஏய்.. நீ ஏன் முஞ்சிய ஒரு மாதிரி வச்சுருக்க... டாக்டர் மனைவின்னா கொஞ்சம் இதெல்லாம் அனுசரிச்சுதான் போகணும். மொத நாளே தெரிஞ்சுடுச்சா? 5 நிமிஷம்... ரெடி ஆயிட்டு வந்துடறேன்..." கண்ணடித்து சிரித்து விட்டு மணமகன் அறைக்குள் நுழைந்தவணை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவன் தான் என் காதலன், கணவன், மருத்துவர் டாக்டர்.கார்த்திக்.



Thursday, October 22, 2009

அடியே சம்யுக்தா... சர்வேசனின் நச்னு ஒரு கதை போட்டிக்காக II...

ஆகஸ்டு 18 2000 வெள்ளிக்கிழமை இரவு 7:40 :


சேலம் பேருந்து நிலையம் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது..


"என்ன ஊருக்கு கிளம்பிட்டியா?" எதிரில் பையோடு வந்த சம்யுக்தாவிடம் கேட்டேன்.


"ம்ம்..."


"நாங்கெள்லாம் நாளைக்குத்தான் கெளம்புறோம்.."


"ம்ம்..." விடுவிடுவென்று பையை இழுத்துக் கொண்டு போய் விட்டாள்.

"காலேஜ்க்கு வந்து 2 வருஷமாச்சு... அவ ப்ரெண்ட்ஸ்க்குள்ள என்னாமா வாய் அளக்குறா.. நம்மகிட்டதான் வெட்டி ஸீனு..." நினைத்துக் கொண்டே ஒரு சிகெரட் பற்ற வைத்தேன் நான்...


மார்ச் 21 2001 புதன்கிழமை மாலை 6 மணி:


"ரகு ரகு... கொஞ்சம் இங்க வாயேன்" சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்..


"தோ பார்டா.. என்ன சம்யுக்தா... எப்பவும் நானா வந்து பேசுனாலே பயங்கர வெட்டியா ஸீன் போடுவ.. இன்னைக்கு என்ன... ம்ம்ம்... சொல்லு என்ன வேணும்"


"இல்ல.. ஒரு சின்ன ஹெல்ப்... சிஸ்டம் பேக் பண்ணி ஊருக்கு கொண்டு போறேன்.. லக்கேஜ் ஜாஸ்தி.. கொஞ்சம் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் வந்து உதவி பண்ணேனா நல்லா இருக்கும்... " - கேட்டாள்.

"ஹ்ம்ம்ம்... ஓகே ஓகே.. இரு போய் ஒரு ஆட்டோ புடிச்சிட்டு வர்றேன்..." ஆட்டோ தேடி நகர்ந்து போனேன் நான்...


அக்டோபர் 20 2001 சனிக்கிழமை காலை 11.30 :


"இந்த பேக்கரில எல்லாமே நல்லா இருக்கும்.. என்ன சாப்பிடுற?" நான் கேட்ட கேள்வியை மதிக்காமல் என் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.


"யேய்.. சம்யுக்தா... என்ன அப்படி பாக்குற ? யேய்..." மீண்டும் கேட்டேன் நான்.


"இதுக்குத்தான்டா... உன்னையெல்லாம் முதல்ல இருந்தே அவாய்ட் பண்ணேன்... இப்பப் பாரு என்னையவே கவுத்துட்டேல்ல... உன்னையத் தவிர வேற எதையுமே யோசிக்க முடியாத மாதிரி லூசாக்கிட்டேல்ல என்னய... " சொல்லிவிட்டு உதட்டை சிழித்தாள் அவள்.


"ச்சீ.. போடி லூசு... என்னைய லவ் பண்றதுக்கு நீ குடுத்து வச்சிருக்கனும்... எப்பப்பாரு பொலம்பிகிட்டு "


"ஆமாமா... இவரு பெரிய இவரு... "

மனதாரச் சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.


ஜூன் 16 2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி:


நான் செய்வது சரியா தவறா... தெரியாமல் ஒரு பதற்றத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன் நான். சிறிது நேரத்தில் எழுந்து அந்த அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து விட்டேன்...


"என்னடா... ஒரு மாதிரியா இருக்க... பிடிக்கலையா ?" சிரித்துக் கொண்டே கேட்டாள் சம்யுக்தா.


"பண்ணது சரியா தப்பான்னு தெரியல..." அவள் முகத்தை பார்ப்பதற்கே ஒரு போலாய் இருந்தது எனக்கு.


"போடா லூசு.. அதான் 2 பேரும் கன்பார்மா கல்யாணம் பண்ணிக்கப் போறோம்... அப்புறம் என்ன..." சிறிதும் சலனமில்லாம்ல் சொன்னாள் அவள்.


"ஒரு தம்மடிக்கனும் போல இருக்கு" - என் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தேன்.


"ஹ்ம்ம்ம்ம்... நானும் கேள்விப்பட்ருக்கேன்... 'இது'க்கப்புறம் தம்மடிச்சா செம கிக்கா இருக்குமாமே... போய் அடிச்சுக்கோ போ... நாங்கெல்லாம் பொண்ணா பொறந்ததுனால நெறய மிஸ் பண்ண வேண்டி இருக்கு..." பழிப்பம் காட்டிச் சிரித்தாள் அவள்...


ஆகஸ்ட் 22 2003 வெள்ளிக்கிழமை - இரவு 7 மணி :


"லூசு மாதிரி பேசாத ரகு, ஏதோ நம்ம வயசுக்கு காலேஜ்ல அப்படி இப்படி இருந்தோம்... அதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா ? காலேஜ் முடிச்சப்புறமும் அதையே சொல்லிட்ருக்க... " என் கைகளை உதறித் தள்ளி விட்டாள் அவள்.


"என்னம்மா சொல்ற? இதெல்லாம் தப்பு இல்லையா? புரிஞ்சுக்கோ ப்ளீஸ்" கெஞ்சும் தொனியில் இருந்தேன் நான்.


"ச்சீய்... உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது? எனக்கு அம்மா அப்பா லாம் யாராவது இருக்கங்களா... நல்ல வரனா பாக்குறதுக்கு.. ஏதோ இவன் மால்ல பாத்ருக்கான்... எதப் பாத்து விழுந்தான்னு கூட தெரியல... என்னையதான் கல்யாணம் பண்ணி யூ.கே கூட்டிட்டுப் போவேன்னு அடமா சொல்றான். அத விட்டுடுட்டு, உன்னைய கட்டிகிட்டு என்ன பண்றது சொல்லு... போ நீயும் நல்ல வேலயாத் தேடு... நல்லா என்ஞ்சாய் பண்ணு... அப்புறமா வீட்ல பொண்ணு பாக்க சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்குதான் புரியனும்..." அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது...


"என்னடா இப்படி சொல்ற... ப்ளீஸ்டா ப்ளீஸ்டா..." கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் இருந்தேன் நான்...


"ரகு... நீ எப்பவுமே எனக்கு ப்ளான் 'B'யா தான் இருந்துருக்க... என்னோட ப்ளான் 'A'வே வேற... அது புரியாம டார்ச்சர் பண்ணாத... கெட் லாஸ்ட்" சத்தமாக சொன்னாள் அவள்.


"சத்தியமா என் காதல் உண்மைனு உனக்கு ஒரு நாள் புரியும்... கண்டிப்பா என்கிட்ட வருவ... நீ நல்ல பொண்ணுதான் ... அதுல ஒரு மாற்றமும் இல்ல..." சொல்லிவிட்டு விடுவிடுவென்று எழுந்து நடக்கத் தொடங்கினேன் நான்.


இன்று - இரவு 1.00 மணி:


என் குழந்தையின் தலை தடவி சிரிக்கிறேன். "உங்களுக்காகதான்டா எல்லாமே.". அவள் லேசாக மூக்கை இழுத்து விட்டு சம்யுக்தாவின் மேல் காலை போட்டு திரும்பிப் படுத்தாள். அரைகண்கள் திறந்த சம்யுக்தா கேட்டாள்,


"என்னாச்சுங்க... ஏன் இவ்ளோ நேரம்?"


"ஒண்ணும் இல்ல.. நெறைய பக் ப்ராஜக்ட்ல.. இன்னைக்குதான் எல்லாத்தையும் குளோஸ் பண்ணேன். கொஞ்சம் நேராயிடுச்சு.. நீ தூங்கு..."


"ம்ம்.. கொஞ்ச நாளாவே நீங்க சரி இல்ல...உடம்ப பத்தி கவலப்படுறதே இல்ல..." சொல்லிவிட்டு என்னை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு தூங்கலானாள். இரவில்தான் பெண்கள் எத்தனை அழகாய் இறுக்கிறார்கள். மெதுவாய் கண்மூடினேன் நான்.


நவம்பர் 14 2006 திங்கட்கிழமை - இரவு 9.30 மணி :


ஸ்பென்சர் ப்ளாசா கார் பார்க்கிங்கில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கிறேன்.

"ஹேய்... ரகு.. நீ எங்கடா இங்க.. ?" தோளில் கை போட்ட பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள 10 நொடிகள் பிடித்தது எனக்கு.


"யேய் சம்யுக்தா.. நீயா? என்ன கோலம் இது... ஆளே மாறிட்ட.. நீ யூ.கே போலயா... " - ஆளே மாறிப்போயிருந்தாள் அவள்.


"ஹ்ம்ம்ம்.. போனேன் போனேன்... 2 வருஷம்... அதுக்குள்ள எனக்கும் அவன போரடிச்சிருச்சு... அவனுக்கும் என்ன போரடிச்சுருசு... நா அப்டியே ஜாலியா சென்னை வந்துட்டேன்... அவன் ஒரு இம்பொட்டென்ட் ராஸ்கல்.. நீ இங்கதான் செட்டில் ஆயிருக்கியா ? " - கேட்ட போழுது அவள் குடித்திருந்தது தெரிந்தது...


"ஹ்ம்ம்ம்... ஆம... நான் இங்கதான் செட்டில் ஆகிருக்கேன்... சரி டைம் ஆகுது.. " சொல்ல்லி விட்டு கிளம்ப எத்தனித்தேன்..


"ஹே... நில்லுப்பா... நா கூட உன்னைய அடிக்கடி நெனச்சுப்பேன்... உன்னைய கல்யாணம் பண்ணிருந்தா நல்லா செட்டில் ஆயிருகலாமோன்னு... பட்... இப்பவும் நான் ஜாலியாதான் இருக்கேன். சரி... உனக்கு எப்படி.. கல்யாணம்லாம் ஆயிடுச்சா ? "


"நா கெளம்புறேன்..." நொடி தாமதிக்காமல் கரைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன்...


ஜூன் 8 2007 வெள்ளிக்கிழமை - மதியம் 1 மணி :


அலுவலகத்தில் கொஞ்சம் வேலை ஜாஸ்தியாய் இருக்கிறது. இன்னைக்குள்ள நெறய முடிக்கனும்... என் கைப்பேசி சிணுங்கியது... எடுத்தேன்..


"ஹலோ... யாருங்க "


"டேய்.. நீ அன்னைக்கு அப்படி போய்ட்டேனா... உன்னைய விட்ருவனா நா ? " எதிர்முனையில் ஒரு பெண்குரல்.


"ஹலோ... யாரு இது... என்ன வேணும் ? " கொஞ்சம் அதட்டலாக கேட்டேன் நான்..


"ஹே.. நாந்தான்டா.. உன்னோட பழைய காதலி..." கண்டுபிடித்து விட்டேன்... அவள்தான்...


"நீயா ? என் நம்பர்லாம் எப்படி கெடச்சது உனக்கு.." சற்று எரிச்சலாக இருந்தது..


"அதெல்லாம் கெடச்சுது... சொல்லவே இல்ல பாத்தியா... உனக்கு கல்யாணம்லாம் ஆகிடுச்சாம்..."


"ம்ம்ம்ம்"


"டேய்... உன் வொய்ஃப் பேரு கூடா சம்யுக்தாதானாமே? என் அளவுக்கு இருப்பாளாடா... " சற்று நக்கலாக கேட்டாள்...


"யே.. ச்சீ அசிங்கம் நீ... என் தங்கத்த போய் உன்கூட கம்பேர் பண்ற... நாயே" கடுப்பாக வந்தது எனக்கு..


"கோபப்படாத... கோபப்படாத... அந்தப் பேருக்காகவே நீ கல்யாணம் பண்ணிருப்பேன்னு தெரியும்டா எனக்கு... என் பேர்ல உனக்கு எப்பவுமே ஒரு கிக்.. இல்ல..."


"அந்தப் பேருக்காக அவள கல்யாணம் பண்ண வேண்டாம்னு முதல்ல நெனச்சேன்... பட்.. தேங்க் காட்... அந்த மாதிரி தப்புல்லாம் பண்ணல.."


"சரி உன் கொழந்த எப்படி இருக்கு.. ஸ்கூலுக்கெல்லாம் போதாமே இப்போ" கேட்டாள்...


"பை.. கெட் லாஸ்ட்..." சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டேன்..


ஒரு வாரம் முன்பு... இரவு 7 மணி :


கைப்பேசி சிணுங்கியது... எடுத்தேன்..


"ஹலோ... யாருங்க "


"ஹலோ... நா யாரு பேசுறேன்னுலாம் உனக்கு தேவை இல்ல... நா சொல்ற நம்பருக்கு நீ உடனடியா கால் பண்ணணும்... "


"டேய்... யாருடா நீ... நீ சொல்றதெல்லாம் நா எதுக்கு கேக்கணும்.. "


"கேட்டுதான் ஆகனும்... வெற வழி இல்ல... 999..4.... . இது சம்யுக்தாம்மாவோட நம்பர் "


"முடியாதுடா... என்னடா பண்ணுவ... "


"எங்க டீலிங்க்லாம் ரொம்ப மோசமா இருக்கும்... அப்புறம் உன் பொண்டாட்ட்டி கொழந்தைக்குதான் கஷ்டம்... பாத்துக்கோ... ஒழுங்கு மரியாதையா கால் பண் ணு.."

இணைப்பு துண்டிக்கப்பட்டது... பாத்துக்கலாம்... என்ன பண்ண முடியும் இவளால... நினைத்துக் கொண்டேன்...



நேற்று மாலை 6 மணி :


கைப்பேசி சிணுங்கியது... எடுத்தேன்..


"ஹலோ... யாருங்க "


"டேய்... ஆளு வச்சு மிரட்டுனாலும் பயப்பட மாட்டியா நீ?”


"போடி... நானெல்லாம் அசர மாட்டேன்… எதுக்கு என்னைய தொந்தரவு பண்ற ? "


“நானும் எத்தனையோ பேர பாத்துட்டேன்டா... ஆனா என்னவோ தெரியல... உன் அளவுக்கு யாரையுமே பிடிக்கல.... நீ எனக்கு வேணும்... மாசம் ஒரு தடவையோ ரெண்டு தடவையோ... கண்டிப்பா வேணும்....”


“அடச்சீய்... நீயும் ஒரு பொம்பளையா?” - கோபம் கொப்பளித்தது எனக்கு...


" அட... நீதான் பாத்ருக்கியேடா... நா ஒரு அட்ரஸ் உன் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணிருக்கென்... நீ காலையில ஆறு மணிக்கு அங்க வரலேன்னா என்னாகும்னு உன் பொண்டாட்டிகிட்ட போய் கேளு... "


இணைப்பு துண்டிக்கப்பட்டது...


படபடத்தது எனக்கு... வேகமாய் வீட்டுக்கு விரைந்தேன்...


"யேய்... சம்யுக்தா என்னாச்சு இன்னைக்கு? ஏதாவது ப்ராப்ளமா ? " சோபவில் அமர்ந்திருந்த மனைவியிடம் கேட்டேன் நான்...


"அதெல்லாம் ஒண் ணும் இல்லையே... ஏன்? என்னாச்சு ? சீக்கிரமே வேற வந்துட்டீங்க… உடம்பு சரி இல்லையா?" நெற்றியில் கைவைத்துக் கேட்டாள்...


"ஒன்னுமில்ல... சும்மாதான் கேட்டேன்... " சமாளித்தேன்..


"காலையில ஒரு போலீஸ்காரர் வந்தார்... வந்து இங்க பக்கத்துல ஏதாவது தப்பானவங்க குடியிருக்காங்களா.. அது இதுனு கேட்டுடு இருந்தார்... அப்புறம் போய்ட்டார்..." சொல்லி விட்டு கிச்சனுக்குள் சென்று விட்டாள்.


பொறி தட்டியது எனக்கு... சரி இதுதான் போலும்...



இன்று காலை 4 மணி :


அரை போதையில் என் அருகில் அமர்ந்திருக்கிறாள் அவள். என்னுடைய கார் கிழக்கு கடற்கரை சாலையில் பறந்து கொண்டிருந்தது. நேராக ஒரு சவுக்குத்தோப்பில் காரை பார்க் செய்தேன். ஏர் மோட்டார் போட் செட் ஒன்றை தயார் செய்தேன். "கடல்ல என்ஞாய் பண்றதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." பிதற்றியபடியே உடன் வந்து கொண்டிருக்கிறாள் அவள். மோட்டார் போட்டில் அவளைக் கிட்டத்தி நடுக்கடலுக்கு சீறிப் பாய்கிறேன். 10 நிமிடம். நடுக்கடல்... இருட்டு... திரும்பிய பக்கெமெல்லாம் எதுவும் தெரியாத மை இருட்டு... நாங்கள் இருவர் மட்டும்... யோசிக்கிறேன்... நிதானமாய் யோசிக்கிறேன்... என் மனைவி சிரித்து விட்டு போகிறாள். என் குழந்தை நெஞ்சில் முட்டி சிரிக்கிறது. கண்திறக்கிறேன்... முழுதாய் கிறங்கியிருந்தாள் அவள். நெற்றியில் முத்தமிட்டேன். உள்ளே தூக்கி எறிந்து விட்டேன். ஏன் தெரியவில்லை... 2 சொட்டு கண்ணீர் வந்தது.


தற்சமயம் இரவு 1:45 :


எனது ஆண்மையய் வென்று விட்டது போல், மனைவியயியும் மக்களையும் காப்பாற்றி விட்டது போல்... ஏதேதோ உணர்வுகள்..

பக்கத்து வேதகோவிலில் நள்ளிரவு ஜெபம் போலும்... அந்த பாதிரியாரின் வார்த்தைகள் கற்றில் கலந்து கொண்டிருந்தன...


“வெளிப்படுத்தல் அதாவது றெவெலடிஒன் 21வது அதிகாரம் 8வது வசனம்...

அவர் அவர்களை நோக்கி .....

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். "


சம்யுக்தாவின் அன்புப்பிடியில் நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறேன் நான்...



- முற்றும்...



இத அனுப்பவா ? இல்லை இத(ராஸ்கல்) அனுப்பவா ? பாத்துட்டு அப்படியே ஒரு கருத்து சொல்லிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும்.

Thursday, October 15, 2009

ராஸ்கல்ல்ல்...

எரிச்சல் எரிச்சலாக வந்தது காயத்ரிக்கு.
"அருண்ராஸ்கல் ரொம்பத்தான் மாறிட்டான்" மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
இப்படி அவன் ஒருபொழுதும் இருந்ததே கிடையாது. இப்போதான் கொஞ்ச நாளா ரொம்ப ரொம்ப மோசமாயிட்டு வர்றான். அழுத்துக் கொண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு வேலையே ஓடவில்லை. சும்மா பேருக்கு மெயில் பாக்சை திறந்து வைத்தாள். முதல் மெயிலே மேனஜரிடமிருந்து வந்திருந்தது. இன்று மாலை நான்கு மணிக்குள் ACI கிளைண்டுக்கான அத்தனை வேலையயும் முடித்து விட்டு தன்னை வந்து பார்க்குமாறு கூறியிருந்தார். ஏற்கனவே இந்த பிராஜக்ட் UAT டெட்லைன் தள்ளிப்போய் 4 நாள் ஆகியிருந்தது.
"இது வேற பெரிய தொல்ல, போனா கொன்னு எடுக்கப் போறாரு." நினைத்துக் கொண்டே மெயில் பாக்சை மேலும் கீழும் சுற்றினாள், அருணிடம் இருந்து ஒரு மெயிலாவது வந்த்ருக்கா என்று. யார் யாரிடமிருந்தெல்லாமோ குட்மார்னிங் குட் டே என்று எக்கச்சக்க மெயில்கள் இருந்தன. ஆனால் அருணிடம் இருந்து பேருக்கு கூட ஒரு மண்ணும் வரவில்லை.கடுப்பாக இருந்தது.
"போய் காபி குடிச்சுட்டு வந்து வேலய பாக்கணும். அவன் கால் பண்ணா மட்டும் பேசவே கூடாது. அவனுக்கும் அப்பத்தான் புரியும்"
தனக்குத்தானே புலம்பிக் கொண்டு கேபிட்டேரியா போய் காபி எடுத்துக் கொண்டு ரிவர் பிரிட்ஜ்ல் போய் அமர்ந்த பொழுது உடம்புக்கும் மனசுக்கும் ஏதோ செய்வது போல் இருந்தது.மனசு முழுதுமாக அருண்ராஸ்கல் அருண்ராஸ்கல் அருண்ராஸ்கல் என்று ஏதோ சுற்றிக் கொண்டே இருந்தது.
அருண், அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எனக்குள் இறங்கிய காதல் சாத்தான். ட்ரெயினிங் பேட்ச்ல அவன முதன் முதலா பாத்தப்போ அவனா வந்து ஹாய் சொல்லி பேசுனதிலிருந்து முந்தாநேத்து நைட் 10 நிமிஷம் பேசியது வரைக்கும் எல்லாம் அவளைச் சுற்றி சுற்றி வந்தது.





அருண், காயத்ரியின் அன்பு காதல் சாத்தான்... புரியும்படியா சொல்லணும்னா காதல் கணவன். ஒரே ட்ரெயினிங் பேட்ச்ல பாத்துப் பேசிப் பழகி 6 மாசம் ஒன்றாக சுற்றிய போதெல்லாம் கூட அவர்களுக்குள் ஒன்னும் கிடையாது. ஆனால் இரண்டு பேரும் ஒரே கிளைண்டுக்கான பிராஜக்டில் ஒரே டீமில் போடப்பட்ட பொழுது அது வெறும் நால்வர் உலகமாகிப் போனது. அந்த உலகத்தில் ஜாவா, ஆரக்கிள், அருண், காயத்ரி நால்வர் மட்டுமே அடங்கிப் போனார்கள். யாரும் எதுவும் சொல்லாமலே உனக்கு நீ எனக்கு நான் என்று அவர்களையறியாமலே ஏதோ ஒன்றுக்குள் சிக்கித் தான் போயிருந்தார்கள். காயத்ரி காயுக்குட்டி ஆனதும் அருண் அருண்ராஸ்கல் ஆனதும் அடுத்த ஓராண்டுக்குள் தானாகவே நடந்து போயிருந்தது.ஒரு நாள் காயத்ரி ஏதோ ஆரக்கிளில் சந்தேகம் கேட்க அருண் இந்தக் குயரி உனக்கு ஒத்து வருமான்னு பாரு என்று எழுதிக் காண்பித்த பொழுது சொக்கித்தான் போனால்.


select 'Gayathri' || ' & ' || 'Arun' as "Best Couple of the World" from dual;

ராஸ்கல்ல்ல்ல்ல்ல்... என்று சினுங்கி கொஞ்சுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அவளுக்கு. "காயுக்குட்டி கல்யாணம் பண்ணிகலாமாடி" என்று அவன் கேட்ட பொழுது பொமேரியன் நாய்க்குட்டி போல் அவன் நெஞ்சில் முகத்தை வைத்து தலை ஆட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை அவளுக்கு.

ஒரு சின்ன பிரச்சனை கூட இல்லாமல் இரு வீட்டு சம்மதத்தோடு கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பொழுது இவ்வுலகில் கடவுளாலும் காதல் தேவதையாலும் முழுதுமாய் மலர்தூவி ஆசிர்வதிக்கப்பட்ட தம்பதிகள் தாம் என்று மகிழ்ந்து கிடந்தார்கள். இன்னும் ஒரு வருஷம் நல்லா லவ் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பதான் நேரம் நல்லா கூடி வருது. வீட்டுப்பெரியவர்கள் சொன்ன பொழுது திளைத்துப் போனார்கள். ஓராண்டு மூச்சு முட்ட முட்ட காதலித்து பின் திருமணம் செய்து கொண்ட பொழுது அவர்கள் வாழ்க்கை ஒரு காதல் பூக்காடு ஆகிப் போயிருந்தது. திருமணப் பரிசாய் அவர்கள் கம்பெனியில் இருந்து ஒரு மாதம் கனடா, யூ.எஸ் தேனிலவு அனுப்பிய பொழுது தாங்கள்தான் காதல் கடவுளின் நேரடிக் குழந்தைகள் என்று பூரித்துப் போனார்கள். அமெரிக்காவிலும் கனடாவிலும் ஒரே நாளில் நயகராவின் சாரலில் நனைந்து திளைத்த பொழுது
"கண்மணி !!! உன்னோடு சேர்ந்து நயாகராவில் நனைந்து விட்டேன்...
இனி நம் வாழ்வு வணக்கத்திற்குரியது...
மரணம் கூட மரியாதைக்குரியது"

என்று வைரமுத்துவின் கவிதைகளை அவன் தனதாக்கி சொன்ன பொழுதில்லெல்லாம் அவனுக்கு முத்தப்பரிசுகளை அள்ளித் தருவதைத் தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை அவளுக்கு. அந்த முத்தப்பரிசுகளின் பரிசாய் அடுத்த ஓராண்டுக்குள் அழகிய ரோஜா இதழ் போல் இருந்த கிஷானின் பெற்றோர் ஆகிப் போயிருந்தார்கள் அவர்கள். அதற்குப்பின் அவர்கள் இருவரின் உலகமும் கிஷானைத் தவிர வேறொன்றும் அறியாததாய் மாறிப் போயிருந்தது.
கிஷானுக்கு 4 மாதம் ஆன பின் காயு கம்பெனியில் சேர்ந்த நாளில் சொன்னார்கள் அருணுக்கு ஆர்கிடெக்டாக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. அவன் உடனடியாக பெங்களூரிலிருந்து புனே செல்ல வேண்டும். அவன் ஒரே வார்த்தையில் ஒரே முடிவாய் சொல்லிவிட்டான் "இல்லை". இவளுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் இவள்தான் அவனை சமாதானப்படுத்தி சரி சொல்ல சொன்னாள்.

"உன்னையும் கிஷானையும் விட்டுட்டு போனாதான் ஆர்கிடெக்ட் ஆக முடியும்னா அந்த பொடலங்கா ஆர்கிடெக்க்ட் எனக்கு தேவை இல்லை. விட்ட்டுடு."
"இல்லப்பா நமக்காக இல்லேனா கூட கிஷானுக்காகவாவது நீ போதான் வேணும். எவ்ளோ நாள் அங்க இருக்கப் போற. 3 மாசமோ 4 மாசமோ, அதுக்கப்புறம் இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடலாம். கேரியர் முக்கியம்டா.... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்டா".
வேறு வழியில்லாமல் போனான்.

1,2,3... 14,15,16....23....... காலமும் - மாதங்களும் போய்க் கொண்டுதான் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிப்போனது... கிஷான் கூட பேபி சிட்டிங் நிலையை எட்டியிருந்தான். ஆனால் எவ்வளவோ முயன்றும் அருணுக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கவே இல்லை. மாதம் ஒருமுறை, இருமாதம் ஒருமுறை 2 நாள் - 3 நாள் என்று வந்து போய்க் கொண்டிருந்தான். இந்த 2 ஆண்டுகளில் தான் காயத்ரி அவன் இல்லாத வெறுமையை உணரத் தொடங்கியிருந்தாள். தினமும் கால் பண்ணும் நேரத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்,
" எப்படியாவது சீக்கிரமா வந்துடு டா இங்க... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டா..."
அவனும் முயற்சி பண்ணிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இந்த ரெஸ்ஷன் நேரத்தில், ட்ரான்ஸ்பர் லாம் மிகக் கடினமாக இருந்தது. அவளும் கூட புனே செல்வதற்கு ஒரு ட்ரான்ஸ்பர் அப்ளிகேஷன் போட்டு வைத்தாள். இந்த நிலையில்தான் இன்று அவர்களுடைய 5வது திருமண நாள். நேற்று இரவு 12 மணி முதல் அவனிடம் இருந்து போன், எஸ்.எம்.எஸ் ஏதாவது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். எதுவும் வரவில்லை. போன திருமண நாளில் கூட, 4 டெடி பியர், 4 கேட்பரீஸ் பேமிலி பேக், 4 மிக நீண்ட முத்தங்கள் என்று சிம்பாலிக்கா 4வது திருமண நாளை அசத்தியவன் தன். இந்த முறை ஒரு போன் கூட பண்ணல. இந்த ஒரு வருஷத்துல தான் ரொம்பவே மாறிட்டான். மனதிற்குள் நினைத்த போதே ஏதோ செய்தது அவளுக்கு.
“ச்சீ.. என்ன வாழ்க்கை இது, ஒரு கல்யாண நாளைக்கு கூட சேர்ந்து இருக்க முடியல. இதெல்லம் ஒரு பொழப்பா...” மனசு என்னவோ செய்தது. ஆனாலும் அந்த குண்டு மேனஜரின் முகம் தோன்றி மறையவே வேலை முடிக்க வேண்டிய ஞாபகம் வந்தது. “ ஹ்ம்ம்ம்ம்ம்ம்... “ ஒரு பெருமூச்செரிந்தபடி எழுந்து செல்ல எத்தனிக்கையில் அலைபேசி சிணுங்கியது.. "ராஸ்கல் காலிங்..." கட் செய்து விட்டாள். மற்றுமொரு முறை... மற்றுமொரு முறை... மற்றுமொரு முறை.. ஆறு முறை கட் செய்து விட்டாள். அவளுக்கே பாவமாகத்தான் இருந்தது. இருந்தாலும் ஒரு கோபம். வேலைய முடிச்சுட்டு பேசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். திரும்ப கூப்பிடுவோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே வந்து இருக்கையில் அமர்ந்தாள். மெயில்பாக்ஸ் அலெர்ட் காட்டியது... "New Mail from Arun". ஆர்வமாய் ஓப்பன் செய்தாள்.

"அடி லூசு பொண்டாட்டி.. கால் பண்ணா எடுக்க மாட்டியா.. திரும்ப கால் பண்ணுடி.. பிரமாதமான திருமண நாள் பரிசு காத்திருக்கிறது" - ராஸ்கல்...

அவசரமாக கைப்பேசியை எடுத்து கால் செய்தாள். காலை கட் செய்தான் அவன். மீண்டும்... இந்தமுறை எடுத்தான்..

"ராஸ்கல்.. ஏன்டா கட் பண்ற? கல்யாண நாளக்கூட மறந்துட்டேல்ல நீ?"
'
"போடி லூசு... உனக்கு ஒரு செம சர்ப்ரைசான கிப்ட்ட கன்ஃபார்ம் பண்றதுக்குத் தான் இவ்ளோ நேரம் காத்திட்ருந்தேன்... இப்பதான் கன்ஃபார்ம் ஆச்சு... அதான் கால் பண்ணேன்... நீ மட்டும் கட் பண்ணலாம்... நான் பண்ணக்கூடாதா?"

"சொல்லுடா.. என்ன கிப்ட்? ஏதாவது மொக்கையா சொன்ன, உதை வாங்கப் போற..."

"காயுக்குட்ட்டி..... எனக்கு அடுத்த ப்ரோமஷனும் கூடவே சென்னைக்கு ட்ரான்ஸ்பரும் கெடச்சாச்சு... மன்டே அய்யா சென்னை வர்றேன்..."

"ரியலி... யே... சூப்பர் டா... எவ்ளோ கஷ்டம் தெரியுமா, இந்த 2 வருஷத்துல...

இப்போதான் டா நிம்மதியா இருக்கு... தேங்க்ஸ் டா... ராஸ்கல்ல்ல்ல்...." சிணுங்கிக் கொஞ்சினாள்...

"சரி.. வை போன... நான் ட்ரான்ஸ்பர் பார்மாலிட்டிஸ்ஸ ஆரம்பிக்கணும்.. மதியம் கூப்பிடுறேன்..."

"ஹ்ம்ம்ம் டா" போனை கட் செய்து விட்டு பார்த்தால் மேனஜரிடமிருந்து சாட் விண்டோ மின்னிக் கொண்டிருந்தது...
"come to my desk immediately.."
"அய்யய்யோ... வேலய இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே... என்ன பண்றது... சரி குண்டுகிட்ட இன்னும் 2 நாள் டைம் வாங்கிக்கலாம்..." நினைத்துக் கொண்டே மேனஜர் ரூமுக்கு போனாள்.

"வாம்மா காயத்ரி... ட்ரீட்லாம் ஒன்னும் கெடையாதா...? " மேனஜர் கேட்ட பொழுது ஆச்சரியமாகிப் போனது அவளுக்கு.

"ட்ரீட் தான சார்... கண்டிப்பா கொடுத்துடலாம்... ஆனா அதுக்குள்ள உங்களுக்கு எப்படி ?? " கேட்டாள் அவள்.

"எல்லாம் தெரியும்... நீ போய் HR மேனஜரப் போய் பாரு." சொன்னார்..

"ம்ம்.. சரி சார்,,, தேங்க்ஸ்.. "என்றபடியே HR கேபினுக்கு போனாள்...

"ஆர் யூ காயத்ரி ஆப் ACI டீம்?" கேட்டாள் அந்த HR பெண்..

"ம்ம்... ஆமா... நாந்தான்..."

"கங்கிராட்ஸ் காயத்ரி ... உக்காருங்க..."

"யா... சொல்லுங்க.. அவருக்குதான் வந்து.. " என்று சொன்னபடியே வந்து உட்கார்ந்தாள்...

"உங்களுக்கு இந்த சைக்கிள்ல ஆர்கிடெக்ட் ப்ரோமஷன் வந்துருக்கு.. கங்க்ராட்ஸ்..."

"ஓ.. ரியலி... தேங்க்ஸ்... தேங்க்ஸ் ... " சந்தோஷம் தாங்கவில்லை அவளுக்கு...

"என்ன கோஇன்சிடன்ஸ் பாத்தீங்களா? இந்த நேரம் பார்த்து புனேல்ல இருந்து அருண்ணு ஒருத்தர் கன்ஸல்டன்ட்டா ப்ரோமோட் ஆகி போறதுனால உங்க ட்ரான்ஸ்பர் அப்ளிகேஷனையும் எங்களால ஈஸியா ப்ராஸஸ் பண்ண முடிஞ்சுது... இட்ஸ் அ கிரிட்டிக்கல் ப்ராஜக்ட்.. அதனால நீங்க மன்டேயே புனேல ரிப்போர்ட் பண்ணனும்... உங்க பில்லிங் ப்ராஸஸ் கூட ஸ்டார்ட் பண்ணியாச்சு... ஹேப்பி? பீ ஹியர்.. நான் போய் உங்க ப்ரோமஷன் லெட்டர பிரிண்ட் பண்ணிட்டு வந்துறேன்.." சொல்லிக் கொண்டே எழுந்து போனாள் அந்த HR பெண்....


கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்த காயத்ரிக்கு தலையை சுற்றி மயக்கம் வருவது போலிருந்தது... மயங்கியே விழுந்து விட்டாள்...

"வாட் ஹேப்ப்ப்ப்ப்ப்ப்பபபன்ட்ட்ட்ட்?"கத்திக் கொண்டே ஓடி வந்தாள் அந்த HR..

----------------
----------------
----------------
----------------

கண்விழித்து பார்த்த பொழுது அருண் அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான்...

"என்னாச்சுடா?"

"ஒன்னும் ஆகல... நா சீனியர் மேனஜர்ஸ் லெவல்ல பேசிட்டேன்... நீயோ நானோ எங்கயும் போகத் தேவை இல்ல... ரெண்டு பேரும் இனிமே இங்கதான்... உன் ரோல்க்கு இங்கயே நெறைய ஓப்பனிங்ஸ் இருக்கு... இங்கயே இருக்கலாம்னு சொல்லிட்டாங்க... போதுமா ??? "

"ரியலி... நல்லதுடா.. நான் கூட பயந்துட்டேன்... ஆனா ஏன் மயங்குனேன்னு தெரியல.. " சன்னமாகச் சொன்னாள் அவள்.

"இன்னோரு விஷயம்டி... இந்த வாட்டி கண்டிப்பா பொண் கொழந்த தானாம்... டாக்டர் கைய பிடிச்சு பாத்ததுலேயே சொல்லிட்டாங்க...." - கண்ணடித்து சிரித்தான் அவன்.

"வாட்ட்ட்... ராஸ்கல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்... திருடன் டா நீ " என்று சினுங்கி கொஞ்சுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அவளுக்கு.

- முற்றும்...


இந்தக் கதையின் மூலம் நான் சொல்ல விழைந்த கருத்துக்கள்...

1) எந்த பிரச்சனை வந்தாலும் ரொம்பல்லாம் பீல் பண்ணாதீங்க.. நல்லது நடக்க ஆரம்பிச்சா எல்லாம் தானே நடக்கும்.

2) இரண்டு குழந்தைகளுக்கு இடையில் போதிய இடைவெளி தேவை.. :))))))))) பிம்பிலிக்கி பிலாபி...

நண்பர்களே... இது “சர்வேசனோட நச்னு ஒரு சிறுகதை” போட்டிக்கு தகுந்ததா இருக்குமான்னு பாத்துட்டு ஒரு கருத்த சொல்லிட்டு போங்க....

Saturday, June 27, 2009

மெய்ப்பொருள் . . .

உரையாடல் போட்டிக்காக எழுதப்பட்டது...

"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே..." - வைரமுத்து.

கதவு #1 :

"டேய் கிரீஷ்... இன்டெர்நெட் கனெக்ட் ஆகுதா டா ?" கேட்டபடியே அந்த
சீப்ரோஸ் அப்பார்ட்மென்ட்டின் ஏழாவது
மாடி கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் சந்தோஷ்...

"இல்ல மச்சி... நான் நாலு தடவ கால் பண்ணிட்டேன்... இன்னும் வந்து சரி
பண்ணல.." -
கிரீஷ்.

"டாமிட்.. என்னடா இது... 3 நாள் ளா நெட் வேல செய்யலேனா எப்படி டா?
நான் ஆர்குட் பண்ணி, சேட் பண்ணி 3 நாளாச்சு டா... என்ன வெளையாடுறாங்களா? வரட்டும்... விட்டு கிழிக்கிறேன்..."



"ஹ்ம்ம்ம்... டென்ஷன் ஆகாத டா... வரட்டும், பாத்துக்கலாம்..."

"ம்ம்ம்..ம்ம்ம்... பயங்கரமா பசிக்குதுடா... சாப்பிட எதாவாது ஆர்டர்
பண்ணீங்களா, இல்லையா..."

"அபி அங்க மூணாவது ரூம்ல இருக்கான் பாரு.. அவன் தான் பீட்ஷா
ஆர்டர் பண்ணிருக்கேன்னு சொன்னான்... கேளு என்னாச்சுனு..."

"அபி... டேய் அபி..." -
இது சந்தோஷ்

"சொல்டா சந்தோஷ்..." - உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தான் அபி...

"பீட்ஷா சொன்னியா, இல்லையா டா? சொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு?"

"அப்பவே சொல்லிட்டேன் டா... அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு..."

"அரை மணி நேரம் ஆச்சா? என்ன உலகம் டா இது? சீப்ப்ரோஸ் அப்பார்ட்மென்ட்ல 18,000 ரென்ட்க்கு இருக்கோம்னு தான் பேரு... 3 நாள்ளா நெட் ஒர்க் ஆகல.. பீட்சா சொல்லி அர மணி நேரம் ஆனாலும் வர மாடேங்குது... நம்ம லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கோமோ தெரியல.."

"பொலம்பாத டா... வரும் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு..." -
கிரீஷ்

"ஹ்ம்ம்.. என்னவோ போங்க... டேய் அபி மண்டையா... உள்ள என்னடா பேன் பாத்துட்டு இருக்கியா... இங்க வாயேன்டா..." - கத்தினான் சந்தோஷ்.

"எதுக்குடா கத்துற... இந்தா வர்றேன்... சொல்லுடா என்ன.."

"சும்மா தான் கூப்பிட்டேன்... ஹோண்டா ஜாஸ் ஆட் பாத்தியா, செமையா
இருக்குல்ல..."

"ம்ம்.. சூப்பரா இருக்கு, ஆனா வண்டிதான் கொஞ்சம் சொதப்பல்லாமா..."

"சொன்னாங்க சொன்னாங்க... நீ உங்க வீட்டுக்கு சுவிப்ட் தான வாங்கி
கொடுத்துருக்க.."

"ம்ம்ம்... ஆமாடா..."

"அத ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ற? மைலேஜ் எதாவது சரி இல்லையா?"

"நீ வேற போடா... என் நெலம தெரியாம நீ பேசிட்டு இருக்க..."

"ஏன்டா, என்ன ஆச்சு?"

"அத ஏன் கேக்குற.. எங்க மேனஜர் கிட்ட போய் வீட்ல அவசரமா காசு
தேவப்படுது... அதுனால உடனே ஆன்சைட் அரேஞ் பண்ண முடியுமான்னு கேட்டேன்... அவரு இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி 7 மந்த்ஸ் ஆன்சைட் முடிச்சுட்டு வந்த... அதுக்குள்ள, திரும்ப ஏற்பாடு பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு..."

"அய்யோ.. ஏன்டா அப்படி சொன்னாரு... ஆனாலும் நீதான் போன தடவ
வர்றப்பவே 8 லட்ச ரூபாகிட்ட கொண்டு வந்தியே டா? அது என்ன ஆச்சு?
இப்போ என்ன அவசர செலவு உனக்கு?"

"அதுக்குதான் அப்படியே ஹாட் கேஷா கொடுத்து கார் வாங்கிட்டோம்ல...
இப்போ என்னடான்னா, வீட்ல பர்னிச்சர்லாம் பழசாயிடுச்சு... அதெல்லாம்
டீக்ல மாத்திட்டு மார்டனைஸ்டு கிச்சன் போடனுமாமா.. இன்வெர்ட்டர் வேற வாங்கணும்னு சொல்றாங்க... எல்லாம் சேத்தா எப்படியும் ஒரு 5 லட்ச ரூபாகிட்ட செலவாகும்... அதான் என்ன பண்றதுனே புரியல... இந்த மாதிரி கஷ்டெமெல்லாம் வேற யாருக்குமே வரக்கூடாது டா "

"ம்.. புரியுது புரியுது...கஷ்டந்தாண்டா.. நீ வேணும்னா உன் மேனஜர்கிட்ட திரும்ப பேசிப்பாரு...."

"பேசணும்... பேசணும்... ஒரு 2 வாரம் கழிச்சு பேசணும்..

"கவலப்படாத டா அபி... கடவுள்னு ஒருத்தர் இருக்காருல... அவரு பாத்துப்பாரு... பீட்ஷா வந்துருச்சுன்னு நெனக்கிறேன்... வா, போய் சாப்பிடலம்..."

கதவு #2 :

"என்னய்யா சண்முகம், ரெண்டு நாளா ஆளக்காணோம்?" கேட்டபடியே
பத்ரப்பட்டியின் பஸ்ஸ்டான்டு டீக்கடை ஓலைத்தட்டிக்கதவை தள்ளி வைத்தவாறே கேட்டார் சேதுராமன்..


"சும்மா திருப்பத்தூர்ல இருக்க மகன் வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு
வ்ந்தேன்.." டீக்கடை பெஞ்சில் இருந்து பேப்பரை புரட்டியபடியே சொன்னார் சண்முகம்..

"ஓஹோ.. யோவ் என்னய்யா பேப்பர பாக்குற... நாந்தான் சொன்னேன்ல,
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கொடுத்துருவாங்கண்ணு... நீங்கதான் இல்லன்னு சொன்னீங்க" -
கேட்டார் சேதுராமன்..

"அட !!! ஆமா அண்ணச்சி.. நீங்க சொன்ன மாதிரியே தான் ஆயிடுச்சு...
நாங்க தான் கலைஞர் இருக்குற வரைக்கும் யாருக்கும் முதல்வர் பதவில பங்கு வராதுன்னு நெனச்சோம்... ஆனா, தலைவரே கொடுத்துட்டாரே"

"எனக்கு முன்னாடியே தெரியும்யா.. ஏதோ.. தலைவருக்கு கொஞ்சம் தல பாரம் கொறஞ்சா சரிதான்.. சரி... சரி... நம்ம சகாக்கள்லாம் எங்கய்யா? யாரையுமே காணோம் " -
சேதுராமன்....

"குமரேசன், ஏதோ நெலத்தகராறு விஷயமா வெளியூர் போயிருக்கார் போல... தங்கவேல் அண்ணண் வருவாருன்னு நெனக்கிறேன்..."

"நான் யாரையுமே 2 நாளா பாக்கவே இல்ல... ஊருக்கு கீருக்கு போனா சொல்லிட்டு போங்கப்பா.."

"ம்ம்ம்...ம்ம்ம்... இனிமேல் பாத்துகிடலாம்"

"சரி.. சரி... யப்பா மாஸ்டர்... சக்கர கம்மியா... அர சக்கர போட்டு 2 காபி போடுப்பா.. இந்தா தங்கவேலும் வந்துட்டாருல்ல... மாஸ்டர், காபி மூணா போடுப்பா"

'எனக்கும் சேத்து நீங்களே காபி சொல்லீட்டீங்களா.." கேட்டபடியே உள்ளே வந்தார் தங்கவேல்...

"என்ன தங்கா... 2 - 3 நாளா ஆளேக்காணோம்... ?" - இது சேதுராமன்.

"நீங்களும் எதாவாது வெளியூர் பிரயாணமோ? " - கேட்டார் குமரேசன்...

"தங்கச்சி வீட்ல ஒரு சங்கதி ஆகி போச்சு அண்ணாச்சி... அதான் உசிலம்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்..." கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார் தங்கவேல்...

"என்னாச்சு தங்கா... எதாவது பிரச்சனையா? " கேட்டார் சேதுராமன்..

"ஆமா அண்ணாச்சி... தங்கச்சி மாப்பிளைக்கு ஊர் நடுவுல மெயின் ஆன எடத்துல ஜவுளி கடை... கடையோட சேந்தா மாதிரி வீடு.... கட நல்லா தான் போய்ட்டு இருக்கு... மூணு பிள்ளைங்க படிப்பு, வீட்டு செலவு எல்லாம் கட வருமானத்துல தான்... "

"சரி... அதுல இப்போ என்ன பிரச்சனை ? ? " - சேதுராமன்..

"அதான் அண்ணாச்சி.. ஊருக்குள்ள ரவுடித்தனம் பண்ணி அடாவடியா சுத்திட்டு இருக்க பய ஒருத்தன் உண்டு... பேரு உம்ருமணி... அவனுக்கு இப்ப திடீர்னு இந்தக்கடை மேல ஒரு கண்ணூ... நாலு அரசியல் ஆளுங்க,ரெண்டு பொறுக்கி பசஙகளோட வந்து கடைய உடனடியா காலி பண்ணி பேரு மாத்தித் தர சொல்லி ஒரே தகராறமா... அஞ்சு காசு கூட தர மாட்டோம்னு வேற சொல்லிட்டான் போல இருக்கு... தங்கச்சி போன் போட்டு ஒரே அழுகை... அதான் என்ன ஏதுன்னு பாப்போம்னு போக வேண்டியதா போச்சு..."

"இது என்ன தங்கா இது, பகல் கொள்ளயாவுல்ல இருக்கு ?" - இது சேதுராமன்.

"நான் போயும் ஒன்னும் பண்ண முடியல அண்ணாச்சி... அவைங்க ரொம்பவே கறாரா இருக்கானுக... 10 நாள் டைம் மட்டுந்தான் வாங்க முடிஞ்சுது... போலீஸ், வக்கீல் கோர்ட்டுன்னு அலையவும் திராணி இல்ல... தங்கச்சியும், மாப்பிள்ளையும் தெகச்சி போய் இருக்காங்க... 3 ல 2 பொட்டப்புள்ளங்க வேற... ரொம்ப சங்கடமா இருக்கு... "

"உயிர எடுக்குறதும் ஒண்ணுதான்... பொழப்ப எடுக்குறதும் ஒண்ணுதான்... நாசமா போற பசங்க... இப்போ 10 நாளைக்குள்ள என்னதான் ப்ண்றதா உத்தேசம்.. ?" - கேட்டார் சேதுராமன்.

"அந்த எடுவட்ட பயலுக்கு மனசு மாறுதான்னு பாக்கணும்... 2 லட்ச ரூபா பெறுமானமுள்ள கடைக்கு எதாவது ஒரு 40000, 50000 கிட்ட கொடுத்தானாக்கா கூட எதவது பெட்டிக் கட, பீடிக் கட வச்சு பொழைக்க சொல்ல வேண்டியது தான்... நம்ம இருக்க நெலமைக்கு நம்ம காசு பணமா கொடுக்க முடியும் ? வர்ற வரைக்கும் வாழ்க்க... விதி வந்தா சாவுன்னு போக வேண்டியதுதான் அண்ணாச்சி... இந்த மாதிரி ஒரு அப்பனுக்கு பொறக்காததெல்லாம் நம்ம எதுக்கவா முடியும்?" - சொல்லிமுடிக்கையில் தங்கவேல் கண்கள் குளம் கட்டியிருந்தன...

"கவலப்படாதீங்க தங்கா... கடவுள்னு ஒருத்தர் இருக்காருல... அவரு பாத்துகிடட்டும்... காபியக் குடிங்க..." கனத்த மனத்தோடு சொன்னார் சேதுராமன்...

கதவு #3 :

"ஐயா.. ஐயா.. யாராவது இருக்கீங்களா?" முனகியபடியே அந்த மருந்து கடையின் கண்ணாடிக்கதவை தள்ளினான் சேகர்...

"டேய்.. யாருடா அது,, பிச்சக்கார பயல உள்ள விடுறது...ஓடுறா... கதவை ஓங்கி அடைத்தான் கடை முதலாளி...

மூக்குச்சில்லு உடைந்து பொல பொலவென்று ரத்தம் கொட்ட, "யக்காஆஆஆ" என்று அலறிக்கொண்டு தெருவில் விழுந்தான் சேகர்...

"டேய்.. ஏன்டா இந்தக்கடக்காரங்கிட்ட போய் வம்பு இழுக்குற... அவனே என்று அரற்றியபடியே சேகரைத் தூக்கி விட்டார் ஏட்டு ராமநாதன்.

"சார்... நா ஒன்னியும் வம்பு வளக்கல சார்... மருந்து வாங்க தான் கதவ தட்னேன்..."

"மருந்து வாங்கவா? யாருக்குடா மருந்து, காசு வச்சுருக்கியா?" - அதட்டல் தொனியில் கேட்டார் ஏட்டு...

"சாந்தி அக்காவுக்கு... காசு 100 ரூபா இருக்கு சார்.." - ரத்தத்தை வழித்து விட்டபடியே சொன்னான் சேகர்...


"பாத்தா அனாதப் பய பிச்சக்காரன் மாதிரி இருக்க... யாருடா சாந்தி அக்கா ? ஒரு நிமிஷம் இரு.. எப்படி ரெத்தம் வருது பாரு... " என்றபடியே சோடாவும் வாட்டர் பாக்கெட்டும் வாங்கி கொண்டு கொடுத்தார் ஏட்டு.."

யாருன்னா என்னத்த சொல்றது... எனக்கு அப்பனாத்தா அத்தனையுமே அதான் சார்.. அந்த சேரியாண்ட உள்ள குப்பத்தொட்டில என்ன 10 நாப்புள்ளையா கண்டுகினு இட்டாந்துருக்கு,... வெவரந்தெளிஞ்ச வயசுலேர்ந்து அது கால தான் சுத்தி வந்துனுருக்கேன்.. அதுக்கு இல்லாட்டி கூட என் வயித்த எப்டியாவது ரொப்பி விட்ரும்... அதுக்கு தான் இப்ப உடம்பு முடியல.. அதான் மருந்து வாங்க அந்தா இவன் வாய ஒடச்சு வுட்டான்.. கம்னாட்டி.."

"ரெண்டு அனாதையா... என்னடா செய்து உங்க அக்காளுக்கு ?" - எகத்தாளமாக கேட்டார் ஏட்டு..

"என்னெனமோ செய்யுது சார்.. அந்த குப்ப மேடான்ட தான் சார் எங்க வூடு... அது பக்கமே எங்க வூட்டாண்ட பீப் ஸ்டால் வச்சுகினு வந்தவன் ஒருத்தங்கிட்ட எனக்கு பழக்கம் வந்துச்சு.. வீட்டுக்கு வரப்போக அக்காவுக்கும் அவனாண்ட இஷ்டமாயி போச்சு... அதுங்களும் அப்புறம் ஒண்ணு மண்ணா கட்டிகிச்சுங்கோ... நா கடப்பக்கம் பசங்க வூடாண்ட குடியாந்துட்டேன்... திடீர்னு ஒரு நாள் நம்ம தோச்துப்பய அக்கா புருஷன் பொணத்த கொளத்தாங்கரைல கண்டுகினு இட்டாந்தான்.. போய் பாத்தா அக்கா மூளி கெணக்கா ஒக்காந்துனுருக்கு... பாத்தாஅந்த நாதாரி டெஜன் கணக்கா பொம்பளகிட்ட போயி நோய் கட்டிகினான் போல இருக்கு... திடீர்ன்னு நெஞ்சு சளிக்கு டெஸ்ட் எடுக்க போய் நோய் தெரிஞ்சுருக்கு... எனக்கு பயந்துகினு கல்ல கட்ட்டி ொளத்துல வுழுந்து போய்ட்டான்.. சரின்னு காரியத்த முடிச்சுகினு வந்து அக்காவ
தேத்தலாம்னு பாத்தா நிமிஷத்துக்கு 2 தபா மயங்கிகினே கெடந்துச்சு... இன்னா ஏது ஆஸ்பித்திரியாண்ட தூக்கினு போனா அக்கா மாசமாகீதுன்னாங்க... சர்ரி, ஆணோ.. பொண்ணோ அதுக்கு தொணைக்கு ஒரு புள்ள ஆச்சுனு கொஞ்சம் மூச்செரைக்க செல்லோ சொன்னாய்ங்க... அதுக்கும் நோய் வுட்டுகிச்சுன்னு.. நெஞ்சு வுட்டு போச்சு சார்..."

"அடப்பாவி சண்டாளா.. இப்படியுமா வுட்டு போவும்.. " - இரக்கமாய் கேட்டார் ஏட்டு..

"ஆனா கொளந்தைக்கி நோய் வராம ஊசி போட்டுக்கலாம்னு டாக்டருங்கோ சொன்னாங்கோ... சரின்னு போட்டுனுருக்கோம்.. அக்காதான் பேசுறதியே நிறுத்திகிச்சு.. ஒரு சிரிப்பில்ல.. கலகலப்பில்ல... நெதம் எழவு வூடு கெணக்காவே இருக்கு..."
"ஒரு பொம்பளைக்கு இத்தன கஷ்டம்னா எப்படிடா சிரிப்பா ?" - பெருமூச்செரிந்தார் ராமநாதன்.

"கொளந்த பொறந்து 4- 5 மாசத்துல அக்காவும் போயிரும்னு டாக்டருக்ங்கோ சொல்லிகினாங்கோ... சரி அதுக்கப்புறம் இந்த அனாதெக்கி சாந்தி அக்கா மாதிரி அந்த அனாதைக்கி எல்லாமே நாமாதனுக்கிட்டு தான் காலத்த நவுத்திகினு இருக்கேன்" - வானத்தை வெறித்தபடி சொன்னான் சேகர்..

"கவலப்படாதடா... கடவுள்னு ஒருத்தன் இருக்கான்ல... அவன் பாத்துக்கிட்டு தான் இருப்பான்... மரம் வச்வன் தண்ணி ஊத்துவான்... வா மருந்து வாங்கித் தர்றேன்... எடுத்துகிட்டு வீட்டுக்கு போ" என்று அவனை கூட்டிக் கொண்டு போனார் ஏட்டு ராமநாதன்..

Sunday, March 29, 2009

கண்டிப்பாடா செல்லம் ...

அன்று கல்லூரியின் முதல் நாள்....அறிமுகப் படலங்கள் முடிந்து விடுதியில் வந்து படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. காதுகளில் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது "ராதிகா ப்ரம் சென்னை ராதிகா ப்ரம் சென்னை". எத்துணை அழகாக இருந்தாள் அவள். வெளிர் மஞ்சள் நிறச் சுடிதாரில் தேவதை மாதிரியல்லவா இருந்தாள். கொஞ்சம் டூயட் பட நாயகி மீனாட்சி சேஷாத்ரி சாயல் அவளுக்கு. அவள் முகத்தில் விழுந்த முன்முடிக் கீற்றை விலக்கியபடியே சொன்னதும் சொல்லி முடிக்கும் பொழுது அவள் பூத்த புன்னகையும் அவனுக்குள் மீண்டும் மீண்டும் நிழலாடியது. "இப்படியெல்லாம் கூட அழகான பொண்ணுங்க இருப்பாங்களா?" தனக்குத் தானே இந்தக் கேள்வியை நூறாவது முறையாகக் கேட்டுக் கொண்டான். இப்படியே அவனுடைய ஆரம்ப நாட்கள் ஓடத் தொடங்கியது. விடுதி வாழ்க்கையும் களை கட்டத் தொடங்கியது. சிகெரட், தண்ணி என நித்தம் ஒரு புது அனுபவம். புதுப்புது நண்பர்கள். இத்தணைக்கும் நடுவில் அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே தினமும் கல்லூரி சென்று வந்தான் அவன். நாட்கள் செல்லச் செல்ல அவன் மனதின் கேள்வி மட்டும் மாறத் தொடங்கியது "இவ்ளோ அழகான பொண்ணு நமக்குக் கிடைப்பாளா?". அவனுக்கு உள்ளிருந்தே ஒரு பட்சி சொல்லியது " கண்டிப்பாடா! முயற்சி தான் பண்ணிப் பாரேன்". "பாக்கலாம் பாக்கலாம்" நினைத்துக் கொண்டான் அவன்.

இப்படியே ஆறு மாதங்கள் ஆகிப் போனது. அழகின் மூலங்களைக் கொண்டு அரைத்து செய்யப்பட்ட அவள் ஆங்கிலத்தின் மூலங்களை அரைத்து ஒரு செமினார் எடுத்ததில் கதறித் தான் போனது அந்த கங்கநாயக்கம்பட்டிக் காளை. "ஆத்தாடி என்னமா இங்கிலீபீஸ் பேசுறா, நமக்கு ஒத்து வருமா?" நினைத்த மாத்திரத்தில் பட்சி சொல்லியது "என்னடா பெரிய இங்கீலீஷ், நாலு நாள் படிச்சா உனக்கு கூடத் தான்டா வரும்". "ஆமா ஆமா" நினைத்துக் கொண்டான் அவன். நாட்களும் நகர்ந்து கொண்டே போனது. வகுப்பறைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் அனுதினமும் பார்வையாலேயே காதல் பழகிக் கொண்டிருந்தான் அவன். அன்று கல்லூரி தின விழா. கலை நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கியிருந்தது. மாணவர்கள் விசிலடித்தும் இருக்கைகளின் மேல் ஏறி நடனமாடியும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். அவனும் சகாக்களோடு சேர்ந்து ரயில் ஓட்டிக் கொண்டிருந்தான். மேடைக்கு வந்த தொகுப்பாளினி கூறினாள். "அடுத்ததாக பாடல். பாட வருபவர் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ராதிகா". கேட்டவுடனே முன்னால் ஓடிப்போய் அமர்ந்து கொண்டான் அவன். மேடையில் ஏறினாள் அவள். "ஊருசனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு, பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ தெரியலியே" அதி அற்புதமாக பாடினாள் அவள். அரண்டே போனான் அவன். "ஆத்தீ! என்னென்ன தெறமையெல்லாம் இருக்கு இந்த பொண்ணுக்கு". அவன் இதை யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு நான்கு நிகழ்ச்சிகள் கடந்து போயிருக்கும். மீண்டும் வந்த தொகுப்பாளினி "அடுத்தாக நடனம், ஆட வருவது ராதிகா முதலாமாண்டு கணிப்பொறியியல் துறை" என்று கூறிவிட்டு சென்றாள். "தகஜூம் தகஜூம் ததிங்கினத்தோம் தகஜூம்" முகபாவங்களைப் பிடித்து பந்தாடிக் கொண்டிருந்தாள் அவள். ஏற்கனவே அரண்டிருந்தவன் மேலும் பதறிப் போனான். பட்சி சொல்லியது "கொஞ்சம் கஷ்டம்தான் போல". "இல்ல இல்ல பாக்கலாம்" தேற்றிக் கொண்டான் அவன்.இப்படியே அந்த வருடம் ஓடிப்போனது.




விடுமுறைக்கு வீட்டுக்கு போனவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. சதா அவள் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அவன் வீட்டு டேப்ரிக்கார்டர் நித்தம் நூறு முறையாவது ஊரு சனங்களைத் தூங்க வைத்து ஊதக்காத்தை அடித்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக இரண்டாம் வருடமும் தொடங்கியது. "இந்த வருஷம் அவகிட்ட கண்டிப்பா சொல்லிரணும்" அடிக்கடி இதையே நினைத்துக் கொண்டான். அந்த நிலையிலே அவன் தோழர்கள் கோடைக்கானல் வகுப்புச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஒருவாறாக அந்த நாளும் வந்தது. சரக்கு சரவெடி வீதம் ஓராயிரம் ஓ போட்டபடி தொடங்கியது சுற்றுலா. இரண்டு நாட்கள் சரியான ஆட்டம். மூன்றாவது நாள் காலையில் எல்லாரும் குணா குகைளுக்குச் சென்று விட அவன் மட்டும் அந்த மலைப்பாதையில் நின்று தம் அடித்துக் கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தால் ராதிகா மட்டும் தனியாக வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த விநாடி சிகரெட்டைப் போட்டு அணைத்தான். அவனருகில் வந்தாள் அவள்.




தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்லக் கேட்டான்


" என்ன ராதிகா, நீ குணா கேவ்ஸ் போலியா?". அவன் அவளிடம் பேசும் முதல் வார்த்தை. கோடைக்கானலின் குளிரையும் மீறி ஒரு உஷ்ணம் அவன் உடல் முழுதும் பரவியதை அவனால் மட்டுமே உணர முடிந்தது.


"இல்லப்பா, தல வலிக்குற மாதிரி இருக்கு, அதான்" சாதரணமாகச் சொன்னாள் அவள்.


"ஏன், என்னாச்சு?"-அவன்.


"தெரியலப்பா, அத விடு. பாக்க பாப்பா மாதிரி இருந்துட்டு தம்மெல்லாம் அடிப்பியா நீ? ஹ்ம்" ."இல்ல, எப்பவாச்சும் தான்"."பாத்துக்கோ உடம்புக்கு நல்லதில்ல, அவ்ளோதான்".


"ம்ம்ம்..." முதல் முறையே எத்தனை அக்கறையாக பேசுகிறாள்!! அவனுக்கு வியப்பாகத் தான் இருந்தது.


"நேத்து ஒரு ரூம்ல தங்க வச்சீங்களே, அது ரூமா? வெந்நீரே வரல. நாங்க யாருமே குளிக்கல தெரியுமா?"இது அவள்.


"பனியில் நனையா விட்டாலும் ரோஜாப்பூ அழகுதான்! குளிக்காத நீயும்" உதட்டுக்குள் முனகினான் அவன்.


"என்ன சொன்ன?"

"ஒன்னுமில்ல, ஏதோ இன்னைக்கு மட்டும் தான் குளிக்காத மாதிரி இந்த அலட்டு அலட்டுற, பொண்ணுங்கள்லாம் வாரத்துக்கு ஒரு தடவ தான் குளிப்பீங்களாமே அதான் சொன்னேன்"

"ஓய், என்ன நக்கலா. நாங்கள்லாம் ஒன்னும் அப்படி கெடையாது தெரிஞ்சுக்கோ"

அதற்குள் அனைவரும் வந்து விட பேருந்தில் ஏறி புறப்பட்டார்கள். பல நூறு முறை கிள்ளி பார்த்துக் கொண்டான் இது நினைவா என்று. சந்தோஷம் தாங்க முடியவில்லை அவனுக்கு. "எப்படிப் பேசினேன் அவளிடம். ஏதோ பேசியாச்சு இனிமே படிப்படியா கொண்டு போறதுலதான் இருக்கு." நினைத்துக் கொண்டான் அவன். அன்று இரவே கல்லூரிக்குத் திரும்பினார்கள்.


அது முதல் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகை உதிர்த்துச் சென்றாள் அவள். ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான் அவன். இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் துறைக்கான சிம்போசியம் விழா வந்தது. சீனியர்களிடம் கெஞ்சி அவளையும் தன்னையும் இரண்டாம் ஆண்டிற்கான கோஆர்டினேட்டர்களாய் போட்டுக் கொண்டான். நேரே அவளிடம் சென்றான்,

"ராதிகா! சிம்போசியத்துக்காக உன்னையும் என்னையும் கோஆர்டினேட்டர்ஸா போட்ருக்காங்க. அது விஷயமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உன் ஹாஸ்டல் போன் நம்பர் குடு".

"ஹாஸ்டல் நம்பர் எதுக்குப்பா? இந்தா இது என்னோட மொபைல் நம்பர் 9090909090, இதுக்கே கால் பண்ணு".

தேவையோ தேவையில்லையோ அந்த நம்பருக்கு தினமும் கால் பண்ணத் தொடங்கினான். அவன் சொல்வதெற்கெல்லாம் "அப்படியே பண்ணிடலாம்" என்பதை மட்டுமே பதிலாக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். வீட்டில் ஒரு துரும்பைக் கூட இங்கும் அங்கும் அசைக்காதவன் விழுந்து விழுந்து வேலை பார்த்தான் சிம்போசியத்துக்கு. அன்று விழாவிற்கு முதல் நாள். அவளை அலைபேசியில் அழைத்தான்

"ஹலோ, சொல்லு"

"இல்ல இன்னக்கி டெக்கரேஷன் ஆர்டிக்கிள்ஸ் வாங்கப் போகனும், நீ கெளம்பி வா"

"எதுல போறது?"

"நானான்னா பசங்ககிட்ட பைக் வாங்கிட்டு போய்டுவேன். நீயும் வர்றேல்ல, அதுனால பஸ்ல தான் போகனும்.."

"இல்ல இல்ல... நீ பைக் வாங்கிட்டு வா, நம்ம போலாம்"

"சரி அப்டின்னா பத்து நிமிஷத்துல வர்றேன், நீ கேட் பக்கத்துல வெய்ட் பண்ணு"

அலைபேசியை அணைத்து விட்டு ஆனந்தக் கூத்தாடினான். "ஆஹா என்னெனல்லாமோ நடக்குதே". அவளை வண்டியில் கூட்டிச் சென்று பொருள்களெல்லாம் வாங்கி விட்டுப் பின்னர் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். உணவருந்தினார்கள். கல்லூரிக்குத் திரும்பிய பிறகு விடிய விடிய டெக்கரேஷன் வேலை பார்த்தார்கள். வேலைக்கு இடையிடையாக பேசினான் பேசினான், அவன் சின்னப்பிள்ளையில் மாங்கா திருடியது முதல் இப்போ ஊர்ல நடந்த திருவிழா வரைக்கும் எல்லாம் பேசினான். அவளும் அன்யோன்யமாகவே பேசினாள். விழாவும் இனிதே நடைபெற்றது. அதற்குப் பிறகு வந்த அவளுடைய ஒவ்வொரு காலைப்பொழுது தொடங்கியதும் ஒவ்வொவொரு இரவு அடங்கியதும் அவனுடைய SMS களாலேயே தான்.அவளும் நன்றாகவே பழகினாள். ஆனாலும் அவனுக்குள் இருந்த பட்சி அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் இருந்தது " பேசுறதெல்லாம் சரி, ஆனா எப்படா சொல்லப் போற??". "இரு இரு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" அடக்கி வைத்தான்.

இப்படியே போய்க் கொண்டிருக்க ஒரு நாள் இரவு அலைபேசி கதறியது 'ராதிகா காலிங்'. போனை எடுத்தான்

"ஹலோ"

"ஹலோ நான் ராதிகா பேசுறேன்"

"தெரியுது, சொல்லு"

"திருட்டு ராஸ்கல்"

"ஏய்.. எதுக்குத் திட்டுற இப்போ?"

"இன்னைக்கு புது பஸ்ஸ்டான்ட்ல நின்னு தம் அடிச்சிட்ருந்தியாமே, EEE கங்கா பாத்துட்டு வந்து சொன்னா"

"போட்டுக் குடுக்குறத தவிற வேற வேலயே கெடையாதா அந்த குள்ளவாத்துக்கு?"

"அவளத்திட்டாத, நீ அடிச்சியா, இல்லையா? சொல்லு"

"சும்மா பசங்க கிட்ட ஒரு பஃப் வாங்குனேன் அவ்ளோதான்."

"பேசாதடா நீ. எத்தன தடவ சொல்றது ஒனக்கு .இனிமேல் என்கிட்ட தயவு செய்து பேசாத" இணைப்பைத் துண்டித்தாள்.

அவனுக்கு என்னவோ போல் இருந்தது. திரும்ப அழைத்தான் அவளை. எடுத்த மாத்திரத்தில்

"இனிமே உன்கூட பேச மாட்டேன்னு சொல்றேன்ல, எதுக்குடா கால் பண்ற?"

"ஸாரி! இனிமே தம் அடிக்கல, போதுமா?"

"ப்ராமிஸ்?"

"சத்தியமா!"

"சரி ஒழி! இனிமே நானும் சண்டை போட மாட்டேன், ஸாரி"

"இன்னோரு விஷயம்""என்ன சொல்லு?""எங்க அம்மாவுக்கப்புறம் ஒருத்தர் பேச்ச மதிக்கிறேன்னா அது ஒன்னோடத மட்டும்தான், தெரியுமா?"

"ஹ்ம்ம்ம், என்னவோ நல்லா இருந்தா சரி... வைக்கட்டுமா"

"ம்ம்ம்.. குட் நைட்."

"பை" .....

போனை வைத்தவனுக்கு தன் காதலை சொல்லி விட்டது போன்ற உணர்வு. "இதுல ஏதாவது புரிஞ்சிருக்குமா அவளுக்கு? பாக்கலாம்" நினைத்துக் கொண்டான்.அந்த வார விடுமுறையிலேயே அவனை வீட்டிற்கு கூட்டிப் போய் அவள் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ராதிகா. அத்துணை அன்பானவர்களாய் அவள் பெற்றோர். அது அவனுக்குள்ளிருந்த பட்சியை மேலும் மேலும் தூண்டி விட்டது "டேய் இவள விட்ராதடா, சீக்கிரமா சொல்லு". "இரு இரு அவசரப்படாத" அவன் அத்தணையையும் கட்டுபடுத்திக் கொண்டான்.ஒருவாறாக இரண்டாம் ஆண்டும் முடிவுக்கு வந்தது.

அந்த விடுமுறையின் 24*7 ம் SMS, மிஸ்டு கால், லாங் கால். ஸார்ட் கால்னு அலைபேசியிலேயே அடங்கிப் போனது இருவருக்கும். மீண்டும் கல்லூரி தொடங்கி ஒரு வாரம் போயிருந்தது. உள்ளிருந்த பட்சி அவனைப் போட்டு துளைத்தெடுக்க ஒரு முடிவோடு அவளுக்கு கால் செய்தான். மறுமுனையில்

"ஹலோ சொல்டா"

"என்ன பண்ணிட்ருக்க?"

"இப்பதான் அப்சர்வேஷன் எழுதிட்ருக்கேன். இனி ரெக்கார்ட் எழுதனும், எதுக்குடா?"

"இல்ல, சும்மா பேசலாம்னுதான்."

"சரி சொல்லு என்ன விஷயம்?"

"இங்க ஹாஸ்டல்ல பசங்க சதா உன்னையும் என்னையும் வச்சு ஓட்டிகிட்டே இருக்காங்க, தெரியுமா?"

"அவங்க பாட்டுக்கு ஓட்டிட்டு போட்டும், நீ கண்டுக்காதடா"


"அது இல்ல ராதிகா, நான் லீவ்ல வீட்டுக்கு போயிருந்தப்போ டெய்லி உன்கூட பேசுனாலும் உன்னைய பாக்கனும் போலவே இருந்துச்சு, தெரியுமா?"

"அப்டினா ஒரு நாள் கெளம்பி வந்ருக்க வேண்டியதுதானடா?" சிறிதும் சலனமில்லாமல் பேசினாள் அவள்.

"இங்க பாரு ராதிகா, புரியாம பேசாத. இப்பல்லாம் பசங்க உன்னையும் என்னையும் வச்சு ஓட்டேல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் செல்லுக்கு வர்ற ஒவ்வொரு மெஸேஜும் ஒவ்வொரு காலும் உன்னோடதாதான் இருக்கணும்னு தோணுது. இதெல்லாம் ஏன்னே எனக்கு தெரியல. இதுக்கு பேருதான் காதல்னா, சத்தியமா சொல்றேன், நா உன்ன லவ் பண்றேன்"

"திருட்டுநாயே, உன்னையப் போய் ஃப்ரெண்டுனு நெனச்சேன் பாரு, என்னைய சொல்லனும்." அழுகை பீறிட்டது அவளுக்கு.

"ராதிகா... ராதிகா..."

"இனிமே ஜென்மத்துக்கும் என்கிட்ட பேசாத, உன்னையெல்லாம் நம்புனது என் தப்பு, வச்சிரு" செல்லை ஆஃப் பண்ணி விட்டாள் அவள். எவ்வளவோ முயற்சித்தும் அவளிடம் பேச முடியவில்லை. ஒரு வாரம் கழித்துத் தான் கல்லுரிக்கு வந்தாள். பேச முனைந்தவனை "ஓடிப்போயிரு" என்று நாயை விட கேவலமாக அடித்து துரத்தினாள்.

அதுவரை ஒரு நாளைக்கு 1,2 என்று புகைத்துக் கொண்டிருந்தவன் 5 பாக்கெட் சிகரெட் அடிக்கத் தொடங்கினான். வாரத்தில் 5 நாட்கள் தண்ணி அடிக்கத் தொடங்கினான். அதுவரை 80%க்கு குறையாமல் எடுத்து வந்தவன் அந்த செமஸ்டரின் அனைத்து பாடங்களிலும் கோட்டை விட்டான். ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவனுக்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. சில நண்பர்களின் உதவியோடும் ஆறுதலோடும் விரைவில் வெளியே வந்தான். அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவன் நண்பர்கள் சிலர் ராதிகாவை பொழுதுக்கும் வசைபாடிக் கொண்டிருந்தனர் "மச்சி அவள்லாம் ஒரு பொண்ணாடா? அழகாயிருக்கோம்ன்ற திமிருடா. உன்னைய நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாளே, நாசமாத்தான்டா போவா" ஆனால் யார் என்ன சொன்னாலும் அவனுக்கு ஒருபொழுதும் அவள் மேல் கோபம் வரவேயில்லை. ஆனால் சூறாவளி மாதிரி படித்து அடுத்த செமஸ்டரிலேயே அத்தனை அரியர்களையும் தூக்கினான்.நான்காம் ஆண்டும் துவங்கியது.

மாணவர்கள் ஆப்டிட்யூடையும் ஆங்கிலத்தையும் துரத்தி ஓடிக் கொண்டிருந்தார்கள். ப்ளேஸ்மன்ட்டும் ஆரம்பமானது. ராதிகாவின் அழகையும் அறிவையும் அவளையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போனது கீகூள் பன்னாட்டு நிறுவனம். அவனுக்கும் அவன் அட்டென்ட் பண்ணிய எட்டாவது கம்பெனியான டி.ஃ.ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நண்பர்களைப் பிரியும் சோகம், ஆட்டோகிராப் நோட்டுகள், ஏப்ரல் மாதத்தில் மாதிரி நண்பர்கள் வீடுகளுக்கு டூர், இதற்கிடையிலே காசு கொடுத்து வாங்கிய டப்பா ப்ராஜக்ட் என்று முடிவை நெருங்கியிருந்தது அந்த ஆண்டு. "மச்சான்களா பிரிய போறோமேடா" என்று சோகத்தை சாக்காக வைத்து கடைசி முப்பது நாளும் தினமும் தண்ணி அடித்ததில் போதையோடு போதையாக ஓடிமுடிந்தது அவ்ன் கல்லூரி வாழ்க்கை . இரண்டு மாத ஓய்விற்குப் பின் வேலையில் சேர்ந்தான் அவன். ட்ரெயினிங் முடித்து விட்டு அவன் பண்ணிய முதல் ப்ராஜக்ட்டே அமெரிக்க உயர் அலுவகத்திலிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றது. வேலையில் சேர்ந்து ஆறு மாதங்களிலேயே முதல் ஆன்சைட் வாய்ப்பு. அமெரிக்கா சென்று திரும்பியவுடனே பதவி உயர்வு என்று இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு இலக்கச் சம்பளம் எட்டியிருந்தான் அவன்.

இத்தனைக்கிடையிலும் "ச்சே எவ்ளோ நல்ல பொண்ணு, நாமதான் லூசுத்தனம் பண்ணிட்டோம், ஹ்ம்ம் " என்று அவ்வப்பொழுது ராதிகவைப் பற்றி நினைத்துக் கொள்வான் .ஒரு ஞாயித்துக்கிழமை மாலை கிழக்கு கடற்கரைச் சாலையின் ஒரு ரிசார்ட்டில் அலுவலகத் தோழி ஒருத்தியோடு பீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அலைபேசி சிணுங்கியது "ரவி காலிங்". "எக்ஸ்கியூஸ்மீ டியர், கால் அட்டென்ட் பண்ணீட்டு வந்துர்றேன்" அவளிடம் விடை பெற்று விட்டுட்க் கொஞ்சம் தள்ளி வந்து எடுத்தான்.

"ஹலோ ரவி,எப்படி மாமா இருக்க?"

"அதெல்லாம் விடு மச்சி, ஒரு சந்தோஷமான விஷயம் தெரியுமா?"

"என்ன மாமா சொல்ல்லு?"

"காலேஜ்ல உன்னைய ஏமாத்திட்டுப் போனாளே ராதிகா, அவ இப்ப அப்பல்லோல அட்மிட் ஆயிருக்காளாம் மச்சி"

"எதுக்கு மாமா? என்ன விஷயம்னு தெரியுமா?"

"நம்ம கூட படிச்சாளே குண்டு லதா, அவள நேத்து பாத்தேன் நங்கநல்லூர் கோயில்ல வச்சு. அவதான் சொன்னா. ஏதோ சீரியஸ் கேஸ் மதிரிதான் தெரியுது"

"அச்சச்சோ, ரவி நாம வேனும்னா போய் பாக்கலாமாடா?""என்னடா மச்சி சொல்ற? உன்னைய எவ்ளோ கேவலப்படுத்துனா, அவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். போய் இதக் கொண்டாடுற வழியப் பாப்பியா? போடா, சரி நான் வைக்கிறேன் மச்சி, அப்புறமா பேசுறேன், பை"

"ஹ்ம்ம், பை மாமா".

அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அவன் கூட வந்தவளை தேடிப் பார்த்தான். அவள் போதையின் உச்சத்தில் யாருடனோ நடனமாடிக் கொண்டிருந்தாள். "சரி அவளா வந்துக்குவா" நினைத்தபடியே காரைக் கிளப்பிக் கொண்டு வீட்டிற்குப் போனான். படுத்தாலும் உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து உட்கார்ந்தான். ஒன்று, இரண்டு.... இருபது சிகெரட்டுகள் முடிந்தது. கடிகாரம் நாலரை மணியைக் காட்டியது. முடிவோடு போய் குளித்துக் கிளம்பினான். நேரே அவன் கார் அப்பல்லோ மருத்துவமனையின் பார்க்கிங்கில் போய் நின்றது. ரிஷப்சனில் போய்க் கேட்டான்


"ராதிகானு 24 வயசுப் பொண்ணு, அட்மிட் ஆகியிருக்காங்க, கொஞ்சம் எந்த வார்ட்னு சொல்ல முடியுமா?"

அங்கிருந்தவள் கம்ப்யூட்டரை தட்டிப் பார்த்து கூறினாள் "மூணாவது மாடில ரூம் நம்பர் 309"

"என்ன கேஸ்?"

"ட்ரக் கேஸ்"

"தேங்கஸ்" சொல்லி விட்டு லிப்டைப் பிடித்து மேலே போனான். 309ம் அறையின் வாசலில் அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர். அவரைப் பார்த்தவுடனே அடையாளம் தெரிந்தது அவனுக்கு. அவர் ராதிகாவின் அப்பா. நேரே போனான்

"ஹலோ அங்கிள்"

"யாருப்பா நீ?"

"அங்கிள் நா ராதிகாவோட க்ளாஸ்மேட், காலேஜ்ல இருக்கும் போது கூட ஒரு தடவ உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்தவராய் "ஆமா தம்பி. ஞாபகம் இருக்கு, நல்லா இருக்கீங்களா?"

"ம்ம்ம், அங்கிள் ராதிகாவுக்கு என்ன ஆச்சு?"

"அத ஏன் தம்பி கேக்குறீங்க? சிக்ஸ் மன்த்ஸ் முன்னாடி யு.எஸ் போனா கம்பெனி விஷயமா. அங்க யாரோ ஒரு ராஸ்கல் இவளுக்கு கோக்கேன்னு ஒரு போதப்பழக்கத்த கத்து குடுத்ருக்கான். இவளும் அதுல ரொம்பவே அடிக்ட் ஆயிட்டா. முணே மாசத்துல உடம்பெல்லாம் வெளிரி உருக்குலஞ்சு போச்சு. அப்புறம் அங்க கம்பெனில இருந்த ஒருத்தர் தான் எங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டு அவள கம்பெல் பண்ணி இந்தியாக்கு அனுப்புனார். ஏர்போர்ட் போய் பாத்தா எங்களுக்கே அடையாளம் தெரியாத மாதிரி சீரழிஞ்சு போயிருந்தா தம்பி, யாருக்கும் சின்ன கெடுதல் கூட நெனக்க மாட்டா, அவளுக்கு போய் இப்படி" சொல்லும் போதே அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவருக்கு.

"அங்கிள் அழாதிங்க, எல்லாம் சரியாயிடும், சீக்கிரமே, ப்ளீஸ் அங்கிள் அழாதிங்க" தேற்ற முயற்சித்தான் அவன்.

அழுகையை அடக்கியவராய்"அப்புறம் இங்க வந்ததுக்கப்புறம் அவளால அந்த கோக்கேன் இல்லாம் இருக்கவே முடியல. போன வாரம் 20 தூக்க மாத்திரைய போட்டு சூசயிட் அட்டெம்ட் பண்ணீட்டா தம்பி. அப்புறம் தான் இங்க கொண்டு வந்து சேத்தோம். இப்போ ட்ரீட்மன்ட்ல கொஞ்சம் பரவாயில்ல, கொஞ்சம் கொஞ்சமா அந்த சனியன மறந்துட்டு வர்றா" விசும்பியபடியே சொல்லி முடித்தார் அவர்.

"ச்சே! ராதிகா காலேஜ்ல இருக்கும் போது எவ்ளோ தெளிவா தைரியமா இருப்பா, அவளா இப்படி பண்ணா? நம்பவே முடியல அங்கிள்"


"என்ன பண்றது, எல்லாம் தலையெழுத்து, கடவுள் புண்ணியத்துல அவ சுகமாயி வந்தானா எங்களுக்கு அதுவே போதும், கல்யாணம் பண்ணிப் பாக்குற ஆசையெல்லாம் கூட எங்களுக்கு இல்ல"

"அங்கிள் நா போய் அவளப் பாக்கலாமா?""போய்ப் பாருங்க தம்பி, போங்க".அந்த அறைக்குள் நுழைந்தான். கசங்கிப் போன மல்லிகைச்சரம் மாதிரி கட்டிலில் கிடந்தாள் ராதிகா. கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் எழும்பும் தோலுமாக இருந்தாள். முடியெல்லாம் கூட கொட்டிப் போயிருந்தது. அவன் கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை. "அந்த ராதிகாவா இது? எவ்ளோ அழகாயிருப்பா" அவளை முதன்முதலாகப் பார்த்தபோது இருந்த முகம் அவனுக்குள் வந்து போனது. மெல்ல அவள் தலையில் கை வைத்து வருடினான். கண்விழித்துப் பார்த்தாள் அவள். ஏய் நீயா? எனபது போலிருந்தது அந்தப் பார்வை.

"நீ தூங்குடா தூங்கு" என்றான் அவன். அவள் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் வழிந்தது.சன்னமாகக் கேட்டாள்

"எப்ப வந்த?"

"இப்பதான். ஏன்டா இப்படி பண்ண?" என்றான் அவன்.

"என்னவோ அறிவக் கடன் கொடுத்துட்டேன், என்னனு சொல்றது? யேய் நா உன்னைய எவ்ளோ பாடா படுத்துனேன். உனக்கு கொஞ்சங்கூட கோபம் இல்லையாடா?"

"அதெல்லாம் இப்ப எதுக்கு? சத்தியமா எனக்கு எந்த கோபமும் இல்ல. நாந்தான் பைத்தியக்காரத்தனமா நடந்துகிட்டேன், ஸாரிடா".கதறி விட்டாள் அவள். அவனிடத்தில் கேட்க வேண்டும் போலிருந்தது"டேய்! லைப்ல எனக்கு ஒரு லிப்ட் கொடுப்பியடா, ப்ளீஸ்". ஆனால் அவளுக்கு வார்த்தைகளுக்குப் பதிலாக கண்ணீர்தான் வந்தது. அவள் தலையை வருடியபடியே சொன்னான் அவன் "கண்டிப்பாடா செல்லம்".

Saturday, September 27, 2008

சக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...

இது வரைக்கும் நான் சில நல்ல, மனச பாதிச்ச படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் பண்ணிருக்கேன். எந்த ஒரு படத்துக்கும் தரக்குறைவான விமர்சனம் பண்ணினதே கிடையாது. சில பதிவர்கள் ஒரு சில படங்கள பாத்துட்டு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவோ,ஏதோ சுயபச்சாதாபம் காரணமாகவோ கொலவெறி பதிவுகள் போட்டு பாத்ருக்கேன். ஆனா முதன்முறையா இந்தப் படத்துக்கு ஒரு கேவலமான விமர்சனம் பண்றேன். ஒரே ஒரு காரணம் தான். கடந்த 2 மாசமா, ஒரு நாள் விடாம கேட்டு கேட்டு,என்னெனவோ கற்பணை பண்ணி வச்சிருந்த ஏ.ஆர்.ரஹ்மானோட 5 முத்தான பாடல்கள் நாசாமாக்கப் பட்ருக்குன்னு ஒரு கொலவெறில இந்த பதிவ போடுறேன்.


கொலைவெறி காரணம் #1:
முதல்ல படத்தோட ஹீரோ மற்றும் அவரோட நண்பர்களோட கதாப்பாத்திரம். எல்லா காலேஜ்லயும், எல்லா கம்பெனிலயும் சில பீட்டர் கேரக்டர்கள் இருக்கும், நம்ம வாழ்நாள்ல இவன் கூடல்லாம் சேந்துரவே கூடாதுனு நமக்கு நாமே சுய சத்தியம் பண்ணி வைராக்கியத்தோட வாழுவோம் பாருங்க. அப்படிப்பட்ட நாலு பேரோட கதைதான் இது . "Hey Dude, Life is a COLA da.. She is a MALA da" அப்படினு எப்பவுமே 'தமிழ்னா இன்னாது?' அப்படினு சீன் போட்டு கடுப்ப கிளப்புற கூட்டத்தோட கதை.

கொலைவெறி காரணம் #2:
இத வாசிக்குற உங்களுக்கு ஒரு கேள்வி.. ஒரு ஐந்து நண்பர்கள் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. ஒரு நண்பர் உங்கள பயங்கரமா கிண்டல் பண்றாரு. உங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்."இவரு பெரிய --------" கோடிட்ட இடத்துல அவங்கவங்க தகுந்தாப்ல ஏதோ ஒண்ணு நிரப்பிக்கோங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான ஏதாவது சொல்லுவீங்க. இந்தப் படத்துலயும் அப்படி ஒரு காட்சி. படத்தோட ஹீரோ சாந்தணுவ அவரு நண்பர்கள் ஓட்டுற மாதிரி ஒரு காட்சி. அதுல கடுப்பாகுற சாந்தனு பேசுற டைலாக் என்ன தெரியுமா?
"Hey Man, If anyymore words, I am sure, I gonna Kill youuu..."




கொலைவெறி காரணம் #3:
படம் முழுக்க முழுக்க சாந்தணு தமிழத் தவிர எல்லா மொழிலயும் பேசுறாரு. அது மட்டுமில்லாம, அவரு பேசுறதுல பல ஆங்கில வார்த்தைகள் GRE, TOEFL, BEC எழுதுனவங்குளுக்கே புரியாததா இருக்கு. படத்துல லட்டு லட்டா 2 நாயகிகள். ஆனா 2 பேருமே "என்னா ஜொல்ழுற... முத்தும் ஹேக்குற... உங்கி வீடி எங்கிருக்கா"னு தமிழ நாரசப்படுத்தீருக்காங்க.இது தவிரவும் படத்துல வர்ற எல்லாக் கதாப்பாத்திரங்களுமே பூமி இல்லாத ஒரு அந்நிய கிரகத்துல வாழுற மாதிரியே நடிச்சுருக்காங்க. அதுலயும் ஹீரோவோட நண்பர்களா வர்ற நாலு பேருல ஒருத்தன் கெடச்சிருந்தா கூட தியேட்டர்ல கல்லாலயே அடிச்சு துரத்திருப்பாங்க.

கொலைவெறி காரணம் #4:
சரி நடிப்பு, வசனம்தான் இப்படி மொக்கையா இருக்கு, திரைக்கதைல ஏதாவது பண்ணீருப்பாங்கணு பாத்தா படம் மொத்தமுமே எதார்த்ததுக்கும், இயல்புக்கும் அப்பாற்பட்டதாவே இருக்கு. ஹீரோ ஹீரோயினுக்கு காதல சொன்ன காட்சியாகட்டும், அவரு வேதிகா வீட்டுக்கு போற மாதிரி கனவு காணுற காட்சியாகட்டும், இல்ல இதுல தான் எல்லாமே இருக்குனு அவங்களே சொல்லிக்குற கிளைமாக்ஸ் காட்சியாகட்டும், எதுலயுமே எதுவுமே சத்தியமா புரியல. அப்பாகிட்ட காசிருக்குன்ற ஒரேயொரு காரணத்துக்காகவே டைரக்டர் ஆகிட்டியா கலாபிரபு. கொஞ்சம் சினிமான்னா என்ன, கதை திரைக்கதைன்னா என்னனுலாம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

கொலைவெறி மிக முக்கிய காரணம் #5:
மருதாணி, சின்னம்மா சிலகம்மா, நான் எப்போது பெண் ஆனேன், இந்த மூணு பாட்டுமே காலத்துகும் நின்னுருக்க வேண்டிய ரஹ்மானோட மெலடி மெட்டுக்கள். ஆனா தேவையே இல்லாம கிராபிக்ஸ் லாம் புகுத்தி பாட்டெல்லாம் படு மோசமா எடுத்துருக்காங்க. "டாக்சி டாக்சி". என்ன கொடுமை சார் இது. நண்பர்கள்ன்ற பேர்ல நடிச்சிருக்கிற நாலு லூசு பசங்களுக்காகவா ரஹ்மானோட இவ்வளவு உழைப்பும், நாசமா போச்சு.

வெள்ளித்திரை படத்துல பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவாரு, இந்தப்படத்துக்கு மிகவும் பொருத்தமான வசனம்... "தமிழனுக்கு தமிழ்ல படம் எடுங்கடா, டேய்".

எங்க ஊர் திருநெல்வேலிங்க. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இந்தப்படத்துக்கு இப்படி தான் கமென்ட் இருந்திருக்கும் "ஏலேய் ! என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா? தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா?"

இந்தப்படத்துல, ஒரெயொரு ஆறுதலான விஷயம்.
....................
...................
...................
...................

அப்படினு ஏதாவது ஒண்ணு சொல்லலாம்னு என் மூளைய பயங்கரமா கசக்கி யோசிச்சு பாத்தேன். தயவு செய்து தப்பா நெனக்காதீங்க. அப்படி எதுவுமே இல்ல.

அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா? தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.

Friday, July 11, 2008

சுப்ரமணியபுரம் !!! இயல்பியலின் உச்சகட்டம்....

சுப்ரமணியபுரம் !!! இயல்பியலின் உச்சகட்டம்....

1980 - நான் பிறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்னால். எப்படி இருந்தது என்று நானறியேன்.. அந்த காலகட்டத்தின் இயல்பான வாழ்க்கை முறையை விவரித்துக் கூறும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அந்தக்காலத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் கிளப் கலாசாரத்தையும், கடத்தல்காரர்களின் வாழ்க்கையையுமே படம்பிடித்துக் காட்டின. அப்படி அல்லாமல் எடுக்கப்பட்ட ஆறிலிருந்து அறுபது வரை, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்கள் ஒரீருவரின் வாழ்க்கையை சுற்றியே எடுக்கப்பட்டவை. பெரும் மாறுதலாய் இந்தப் படத்தில் ஒரு கிராமத்து இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கைமுறையை உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள். "ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்" என்னும் வைரமுத்துவின் புதினத்தில் நான் படித்து உணர்ந்த ஒரு இளைஞர் பட்டாளத்தின் வாழ்க்கைமுறை.



காதல், கோபம்,துரோகம்,பயம்,வெறி என்று ஒவ்வொரு உணர்ச்சியும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டப்பட்டிருக்கும் மிகச்சில திரைப்படங்களுல் தனக்கும் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டது சுப்ரமணியபுரம். படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் அனைத்துமே கவிதை ரகம். "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தமிழக இளைஞர்களுக்கு தனிமையின் தேசிய கீதம் இதுதான். ஜேம்ஸ் வசந்தனின் மிக நீண்டகாலத்து இசை ரசனை அருமை. பிண்ணனி இசையிலும் கூட தனித்துவம் காட்டியிருக்கிறார்.



இரண்டாம் பாதியில் வரும் கோபக்காட்சிகளோ வன்முறை வார்ப்பு.இப்படிப்பட்ட கதைக்களத்தில் இவனா? என்ற கேள்வியோடு வந்த அத்துணை பேருக்கும் முதல் பாதியின் வெகுளிச்சிரிப்பும் இரண்டாம் பாதியின் ஆக்ரோஷமுமாய் திறமையை நிரூபித்து இருக்கிறார் .சென்னை - 28ன் சாக்லேட் பையன் ஜெய்". "எனக்கு சாவு பயத்தக் காட்டிடான்டா" என்று கதறி அழும் இடத்திலாகட்டும், தன் காதலியே தன் சாவிற்கு அழைப்பு விடுத்து இருக்கிறாள் என்று தெரிந்து முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் செத்து மடியும் இடத்தில் ஆகட்டும், நடிப்புக்கு புதுசு என்று தெரியாத அளவுக்கு கச்சிதம் காட்டியிருக்கிறார் ஜெய். கூடவே வரும் நண்பர் பாத்திரத்தில் படத்தின் இயக்குனர் சசிகுமார். பின்னியெடுத்திருக்கிறார். வேலைவெட்டி எதற்கும் செல்லாமல் அடிதடியில் மகிழ்ச்சி கண்டு திளைக்கும் நாயகன் மற்றும் கூட்டாளிகளுக்கு தலைவர் கதாப்பாதிரம்.
படத்தின் பல காட்சிகளில் அவர் திரையில் இருந்து காட்டும் நடிப்புத்திறமையை விட அவர் இயல்பின் உச்சத்தை எட்டுவதற்காக ஒரு இயக்குநராய் மெனக்கெட்டிருப்பது பளிச்சிடுகிறது.



ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பி மூண்று பேரும் சந்தர்ப்பவாத்தின் வில்லன் கதாப்பாத்திரங்களாய் காட்டப்படுவது தமிழ்படங்களுக்கு கொஞ்சம் பழைய பஞ்சாங்கம்தான். இருப்பினும் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கும் விதம் அருமை. துரோகம் என்ற ஒரு வார்த்தையில் அடங்காதவாறு விஷமப்புத்தியோடு அந்தக் குடும்பத்தின் 'கனகு' கதாப்பாத்திரம் செய்யும் அனைத்துமே பிரமாதமான வில்லத்தனம். மேலும் அந்த ஜெயில் சிநேகமாய் வரும் ரவி கதாப்பாத்திரம் கூட நல்ல பாத்திரப்படைப்பு. "கஞ்சா கருப்பு" தமிழ் சினிமாவில் இனி எப்பொழுதும் படத்தின் மைய மாற்றத்தை உள்ளடக்கிய இப்படி ஒரு கதாப்பாதிரம் கிடைக்குமா என்பது சந்தகேமே. இது தவிர முதல் பாதியில் வரும் மொக்கைசாமி, ராசாத்தி, சித்தன் ஆகிய கதாப்பாத்திரங்கள் கிராமத்து நையாண்டிக்கு நன்றே உதவியிருக்கின்றன.

கொலைக்காட்சிகளையும் சண்டைக்காட்சிகளும் கூட இயல்பின் எல்லை மீறாமல் எடுக்கப்பட்டிருக்கும் விதம் புல்லரிப்பு. படத்தின் நடுவில் இருக்கும் சில காட்சிகளின் முடிச்சுகளை கடைசி சில காட்சிகளில் அவிழ்த்திருப்பது ரசிக்கத்தகுந்த கூர்மை.அமீரின் இணை இயக்குநராய் இருந்ததாலோ என்னவோ படத்தின் சில இடங்களில் பருத்திவீரன் வாசனை. ஆனாலும் அது ஒரு குறையாய் உறுத்தவில்லை. படத்தின் ஒளிப்பதிவு முதல் பல இடங்களில் தெளிந்த நீரோடையாய்,ஆயினும் சிற்சில இடங்களில் குழம்பிய குட்டையாய்.



படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்யும் முதல் பத்து நிமிடம் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிக அருமை. அறிமுக இயக்குநராய் இருந்தும் திரைத்துறையில் தனெக்கென ஒரு சுயவிலாசத்தை இந்தப்படம் மூலம் தேடிக் கொண்டார் சசிகுமார். என் இத்யத்தில் சிறு அதிர்வை ஏற்படுத்தி ஒரீரு இரவுகள் தூக்கத்தை தன்க்காய் எடுத்துக் கொண்ட காதல், பருத்திவீரன்,அஞ்சாதே,கற்றது தமிழ் திரைபடங்களின் வரிசையில் இத்திரைப்படமும் தன்னை இணைத்துக் கொண்டது

Sunday, December 30, 2007

அது !!!




நீ சிரிக்கும் பொழுதில் மலராகிறது!!!


நீ அழும் பொழுதில் ஜீவநதியாகிறது!!!


நீ நடக்கும் பொழுதில் ஊர்வலமாகிறது!!!


நீ உறங்கும் பொழுதில் ஓவியமாகிறது!!!


நீ கண்சிமிட்டும் பொழுதில் மின்னலாகிறது!!!


அறியாதோர் அதை திருவோடு என்கிறார்கள்.


அறிந்தோர் அதை தலைமகுடம் என்கிறார்கள்.


நானோ அதை காதல் என்கிறேன்.

Friday, December 28, 2007

அந்த நாள் ஞாபகம்......

இது நான் ஏற்கனவே என்னோட பழைய வலைப்பூவில் எழுதிய விஷயம் தான். ஆனால் என் பதிவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவு. இன்னும் எத்தனை வலைப்பூக்கள் ஆரம்பித்தாலும் இந்த பதிவு அத்தனையிலும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய சின்ன பேராசை :-)

நான் எனது பள்ளிப்பருவத்து நினைவுகளை அசை போடுவதற்காக கடந்த சனிக்கிழமை எனது பள்ளிக்குச் சென்றேன்... சில்லென வீசிய வேப்பங் குளிர்க்காற்றில் பின்னோக்கி விரிந்த எனது நினைவுகளின் சில துளிகள் இங்கே... இதே நினைவுகள் அரசு ஆண்கள் பள்ளிகளில் படித்த பலருக்கும் இருக்கும் என்றே எண்ணுகிறேன்...

தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை...காலத்தால் காக்கப்பட்டு வரும் அரும்பெரும் பொக்கிஷம். என்னைப் போன்றே பலரையும் உருவாக்கி உருவப்படுத்தியிருப்பதில் 160 ஆண்டுகளைக் கடந்து விட்ட அந்தக் கல்விக்கூடம் ஒரு அன்னைக்கூடமாய் மாறியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த நாட்களிலே....

9 மணி பள்ளிக்கு காலை 8 மணிக்கே தொடங்கி விடும் சைக்கிள் பயணம்,ஏழெட்டு நண்பர்களாய் கதைத்துக் கொண்டு அழுத்தி வரும் அந்த பயணம், எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இன்று கிடைக்கத அந்த பயணம்....

வாசலில் வந்து பேன்ட்டு களைந்து அரைக்கால் ட்ரவுசரோடு உள்ளே வந்த அந்த நாட்கள்....ஸ்௯ல் அட்டேன்ஷன் தொடங்கி "சருவலோகதிபா நமஷ்காரம்" வழியாக "ஜண கண மண" பாடிய கூட்டுப்பிரார்த்தனைகள்..."

அக்கா!!!! ஒரு ரூபாய்க்கு மாங்கா குடுங்க", "அண்ணே 50 காசு ஜூஸ் ஒன்னு 1 ரூபா ஜூஸ் ஒன்னு", "பாண்டியன் ஒரு மேங்கோ ஐஸ்" என்று வாங்கித்தின்ற இடைவேளைப் பொழுதுகள்...

10 பேர், 15 பேர் கூடிப் பகிர்ந்து பேசி சிரித்து சம்சாக்களோடும் வடைகளோடும் உணவு உண்டுக் களித்த புளியமரத்தடி நிழல்......

ஒரு பாடத்தில் பெயில் ஆனால் ஒரு அடி வீதம் ஆளுக்குத் தகுந்தாற் போல் வாங்கிய அடிகள்....

சட்டை கழற்றி உள் பனியனோடு கூட உலா வந்த விளையாட்டுப் பாடவேளைகள்.... அதிலே விளையாடிய ஏழுகற்கள், எறிப்பந்துகள்...போட்டுக் காட்டிய நாடகங்கள், பேசிப் பழகிய மேடைகள், எழுதிய கவிதைகள்... அதிலே வென்று குவித்த பரிசுகள்...அதிகாலை நேரத்திலே 5 மணிக்கு லாம் வந்து கலந்து கொண்ட NCC பரேடுகள்....(இப்பல்லாம் நெனச்சாக் கூட 12 மணிக்கு முன்னாடி எந்திரிக்க முடியல)

"உள்ள மட்டும் நானே உசிரக் கூடத்தானே நண்பண் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்" என்று பாடித்திரிந்த நட்பு வட்டங்கள்...

கோயில்மணி சாரிடம் டியூஷன் என்று சொல்லி தண்ணீர் டேங்கிற்கு பின்னால் நின்று "மாப்ளே இவ லட்டு; இவ ஜாங்கிரி; " என்று அடித்த சைட்டுகள்....

சொட்டை என்றும் வழுக்கை என்றும் குண்டன் என்றும் காட்டான் என்றும் வாத்தியார்களுக்கு இட்ட புனைப் பெயர்கள்... அவர்களைப் போலவே பேசிக்காட்டி நடித்துக்காட்டி மகிழ்ந்திட்ட கணங்கள்.......

வருடத்திற்கு ஏழு நாட்கள் நடக்கும் ஐ.எம்.எஸ். விற்பனைத் திருவிழா.... அவற்றில் நாம் கொடுத்த சின்ன சின்ன பங்களிப்புகள்......

இன்னும் எத்தனையோ பசுமையான, செழுமையான, ஆத்மார்த்தமான நினைவுகள் நம் பள்ளிப்பருவத்து நாட்களிளே....ஆனால் இன்று என் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமாணத்தில்...

சிலர் மருத்துவர்களாய்...
சிலர் வழக்குரைங்கர்களாய்...
பலர் பொறியாளர்களய்...

ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஓரத்திலாவது இந்த நினைவுகள் புதைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையே !!!!!

மறக்க முடியல மங்கை சார் !!!

மங்கை சார்@ மங்கை மணவாளன். திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற அத்தனை +2 படிச்சவஙக்ளுக்கும் பரிட்சயமான பெயர். அவர் எளிமையின் எடுத்துக்காட்டு அவர். அவர் ஒரு வேதியியல் வாத்தியார். இத வாசிக்குற உங்க அத்தனை பேராலயும் இதுக்கு பின்னாடி இருக்க ஒரு உண்ர்வுப்பூர்வமான விஷயத்த புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல. ஆனா நீங்க அவர ஒரே ஒரு தடவ உங்க வாழ்க்கைல பாத்தாலும் உஙகளால புரிஞ்சுக்க முடியும்.

இத அவரு வாசிப்பாரா இல்லையான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா அவருக்கு தெரிஞ்சவுங்க்ளோ, அவருக்கு பக்கத்துல இருக்க உங்கள்ல யாரோ ஒருத்த்ர்க்கு இது கண்ல பட்டா, அவ்ர்கிட்ட போய் சொல்லுங்க, உங்க கிட்ட படிச்ச ஒரு பழைய பையன் அவனுடைய நெஞ்சாங்கூட்டில் இருந்து உஙகளப் பத்துன சில வார்தைகள வலைப்பூவுல வடிச்சு வச்சிருக்கான்னு.

மங்கை சார் !!!

மறக்க முடியல மங்கை சார்!!!




கெமிஸ்ட்ரின்னா சைத்தான்னு நெனப்புல இருந்த எனக்கு அதையே கர்த்தனாக்கி, பின்னாடி காதலியாக்கிக் கொடுத்தீங்களே... அத....

எப்போ ட்யூசன் பீஸ் கொடுக்க வந்தாலும் உள்ளதுல்லேயே கஷ்டமான கொஸ்டியன் பேப்பரக் கொடுத்து பரீட்சை எழுத சொல்லி அதுல நான் நூத்துக்கு நாலு மார்க் கம்மியா வாங்குனதுனால,"நான் இன்னும் ட்யூசன் பீஸ் வாங்குற அளவுக்கு சொல்லிக் கொடுக்கல போல, எப்ப நீ சென்டம் எடுக்குறியோ அப்பதான் ட்யூசன் பீஸ் வாங்குவேன்"னு மறுத்தீங்களே.... அத....

நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்காக குடுத்தீங்களே 50 ரூபா... ஒரு வியபாரிக்கு அவ்னுடைய முதல் போணிய பொறுத்துதான் அன்னைக்கு வியாபரம் நல்லா இருக்கும்ன்றது நம்பிக்கை. உங்ககிட்ட வாங்குனது தான் என்னோட முதல் சம்பாத்தியம்... இன்னைக்கு நாலு பேர் பாராட்டுற அளவுக்கு ஒரு நல்ல எடத்துல நான் இருக்கேனே... அத.....


நான் எப்போ ஃபுல் போர்ஷன் பரிட்சை எழுதி நல்ல மார்க் வாங்குனாலும், பரீட்சை பேப்பர்லேயே ஒரு பாராட்டு பத்திரம் எழுதி கொடுப்பீங்களே.... அத....

ராத்திரி உங்க வீட்லயே உக்காந்து படிச்ச பல நாட்கள், ஹைகிரவுண்டு ரவுண்டானா பக்கத்துல உள்ள ஜூபிடர் பேக்கரில கணக்கே பாக்காம சாப்பிட வாங்கிக் கொடுப்பீங்களே.... அத....

நாங்க +2 பரீட்சை எழுதேல, எக்ஸாம் சென்டர்ல இருந்த நம்ம ப்ள்ளிக்கூட வாத்தியார் அத்தனை பேர் மேலயும் நீங்க கோபமா இருந்தாலும் எங்களுக்காக சென்டர் வாசல்லேயே நின்னு வாழ்த்து சொல்லிட்டு போனீங்களே.... அத....

இப்படி எதையுமே என்னால மறக்க முடியல மங்கை சார்....

நான் கெமிஸ்ட்ரில வாங்குன 198 மார்க்குல 0.00000000000001 கூட என்னதுல்ல.... அத்தனையுமே உங்களுதுதான் சார்..


உஙகளுக்கு ஏதோ சுகர், உடம்பு சரியில்லன்னுலாம் கேள்விப்பட்டு மனசு கலங்கி போயிட்டேன்... உங்களுக்காக இல்லேன்னாலும் எங்களுக்காக தயவு செய்து உடம்ப நல்லா பாத்துக்கோங்க...

என் பேரனுக்குக் கூட வாத்தியார்ன்னா இப்படிதான்டா இருக்கனும்னு காமிக்கிறதுக்காக உங்க ட்யூசன்ல தான் சேத்து விடனும்...

மறக்க முடியல மங்கை சார்....!!!!!