Tuesday, January 10, 2012

அழிக்கப் பிறந்தவன் - நாவல் - எனது பார்வை.


நேற்று புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் பலவற்றுள் கொஞ்சம் முக்கியாமானது/முடிவு செய்து வாங்கியது அழிக்கப் பிறந்தவன். லக்கிலுக்கின் வலைப்பூவில் வாசித்த இரண்டு அத்தியாயங்கள் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வாங்கியாகி விட்டது. ஆனால் ஏற்கனவே சென்ற வாரத்தில் வாசிக்க ஆரம்பித்த சற்று தடிமனான ஒரு புத்தகம் ஓடிக் கொண்டிருந்தது. முடிக்க நான்கு நாட்களாவது ஆகும். அதற்குப் பிறகுதான் இதனை எடுக்க முடியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் நேற்றிரவு நண்பன் சிவா போட்ட இந்த முகப்புத்தகப் பதிவை வாசித்தவுடன் தடிமனை மூடிக் கவிழ்த்து விட்டு இதை எடுத்து விட்டேன்.


அழிக்கப்பிறந்தவன் - லக்கிலுக்கின் இந்த முதல் நாவல், ரத்தினச்சுருக்கமாய்ச் சொன்னால் "ஒரு சுவாரசியம் குறையாத விறுவிறுப்பான வாசிப்பானுபவம்". எது வேணும்னாலும் சீப்பா வாங்கலாம்" என்ற சொலவடையோடு சென்னைவாசிகள் நாம் அடிக்கடி போய் வரும் பர்மா பஜார்தான் கதைக்களம். பர்மா பஜாரின் கருப்புச் சந்தை மற்றும் ரத்தமும் சதையுமாய் அங்கு உலவும் மனிதர்கள் பற்றிய டீடெயிலிங் மிக அபாரம். கிட்டத்தட்ட சுஜாதா நிகர். போகிற போக்கில்
கதைக்களம் ப(சு)ற்றிய பல அரி(றி)ய(யா) தகவல்களை அள்ளித்தெளித்துக் கொண்டே செல்கிறது.
இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயமுமே ஒரு அழுத்தமான, அதிவேக சிறுகதையின் தன்மையோடு அமைந்திருப்பதுதான் இந்நாவலின் பலம். நண்பன், ஷங்கர், விஜய், DVD, அரசியல், S Pictures போன்ற சீசனல் சென்சேஷன்களின் பிரயோகம் பிரத்யேகம்.


சிலபல அத்தியாங்களில் பலசில விவரணைகள் பிரமாதப்படுத்துகிறது. எ.கா.வாக இந்நாவலின் மாரி என்னும் கதாப்பாத்திரம் தப்பித்து பேருந்தில் ஊர் சுற்றுவதாய் ஒரு பகுதி. வழக்கமாக ரூட் பஸ்கள் நிற்கும் மோட்டலின் சில கணங்களை பற்றிய விவரணைகளை அசத்தலாக சொல்லிவிட்டு "போலீசுக்கு பயந்து, எதிர்களுக்கு(எதிரிகள் - பக்.44ல் அச்சுப்பிழை) பயந்து பயணிக்கிறவன் தன்னைத் தவிர வேறெவனும் இந்த பஸ் ஸ்டேண்டில் இப்போது இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டான் மாரி" என்று முடிகிற விவரணை. சற்றேரக்குறைய JK (அ) ஜெயகாந்தன் நிகர். அதிகம் ஆனால் 90 முதல் 100 நிமிடங்களுக்குள் வாசித்து முடிக்கப்பட்டாலும், அடுத்த மூன்று மணி நேரத்துக்காவது சிந்தனையோட்டத்தில் வலம் வருவதுதான் வாப்பா, மாரி, மல்லிகா என்னும் கதாப்பதிரங்களின் தனிநபர் வெற்றி. - In turn நாவலாசிரியரின் ஒட்டுமொத்த வெற்றி.


ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும்(என் வரையில் கே.வி.ஆனந்த் போல) ஒரு நல்ல இயக்குநர், ஒரு நல்ல குழுமம் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டை கிளப்பக்கூடும். அவ்வாறு ஒன்று நடந்தால் என்னுடைய பாத்திரத்தேர்வாக இதுதான் இருக்கும். வாப்பாவுக்கு "பசங்க" ஜெயப்பிரகாஷ் அன்றி வேறொருவர் யான் அறியேன் பராபரமே. மாரிக்கு சம்பத் சரிப்படுவார். சுனிதாவுக்கு 'சுப்ரமணியபுரம்' சுவாதி. கொசுவுக்கு ஆடுகளம் முருகேசன்.. மல்லிகாவுக்கு ச்... ம்ம்ம்ம்.... ச்... ச்... ச்... ச்... எதற்கு வம்பு. என் எண்ணங்கள் என்னோடே போகட்டும். மல்லிகா மாமான் நிக்காலோ. யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். நன்றாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில் பர்மா பஜார், பூக்கடை, பாரீஸ்கார்னர், ஆர்மேனியன் தெரு என்று ஒரு பிரமாதமான லோக்கல் சுத்து சுத்திக் காட்டினான் அழிக்கப் பிறந்தவன். 40/45.

2 பேர் சொன்னது என்னான்னா..:

கோவை நேரம் said...

நாவல் விமர்சனம் படிக்கதூண்டுகிறது

கோவை நேரம் said...

நாவல் விமர்சனம் படிக்கதூண்டுகிறது

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.