கடுமையான மனஅழுத்தத்தில் ஏதோ ஒரு நாள் அதிஷாவின் இந்தப்பதிவை படிக்க நேர்ந்தது. ஒரு முறை.. இரு முறை.. நூறு முறை வாசித்தேன். ஒரு நல்ல விஷயத்தை செய்வது பெரிது. அப்படிச் செய்வதைப் பற்றி எழுதுவது அதனினும் பெரிது. அப்படி எழுதுவதன் மூலம் அதற்கான inspirational Factorஐ அப்படியே மற்றவர்க்கு கடத்துவதென்பதெல்லாம் வரம். அந்த வரம் அதிஷாவுக்கு வாய்த்திருக்கிறது. தேங்க்யூ ப்ரோ.http://www.athishaonline.com/2014/12/blog-post.html
இந்தப் பதிவு என்னை பெர்சனலாக அறியாதவர்களுக்கு ஆயாசத்தையும், அறிந்தவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடும். ஏனெனில் என்னை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடும் நான் எவ்வளவு காட்டுத்தனமான சோம்பேறி என்பது. மாடியில் படுத்துக் கொண்டு கீழே உள்ளவனுக்கு அலைபேசியில் அழைத்து மேலே வர வைத்து "செந்தில் செந்தில் அந்த ஃபேன் சுவிட்ச்ச ஆன் பண்ணிட்டுப் போயிரேன் ப்ளீஸ்" என்று கடுப்படிக்குமளவுக்கு. எந்த வேலை எவ்வளவு முக்கியமான வேலையையும் அடுத்த வீக்கெண்டுக்கு சற்றும் சலனமேயில்லாமல் தள்ளி வைத்து விட்டு நாள் முழுவதும் படுத்துக் கொண்டே இருக்குமளவுக்கு. சிறு வயது முதலே கொஞ்ச தூரம் நடப்பதற்கே பயங்கர எரிச்சலாக இருக்கும். அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குக் கூட பைக்தான். அப்படியே ஏதாவது வெளியூரோ சுற்றுலாவோ செல்லும் போது, வழியே இல்லாமல் 100,200 மீட்டர் நடக்க வேண்டி இருந்தாலும் இருவரை துணைக்கு வைத்துக் கொண்டு தோள்களில் கைபோட்டபடியேதான் நடப்பேன். என்னுடைய எடையில் பாதியை அவர்களை சுமக்க வைக்கும் உத்தி அது. அந்தளவுக்கு மிகக்கடுமையான சோம்பேறி.. சிறு வயது முதல் கிரிக்கெட் கூட பெரிதாக விளையாடியதில்லை. ஏரியாவி நடக்கும் டோர்னமன்டுகளில் கூட கமென்ட்ரியிலோ, காம்பியரிங்கிலோதான் உட்கார்ந்திருப்பேன்.
இந்நிலையில்தான் ஓட வேண்டும் என்று முடிவு எடுத்தாகி விட்டது. சரி நாளை காலையிலிருந்து ஓட வேண்டும்... நாளை ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் ஓட வேண்டும். நான்கு அடி நடப்பதற்கே நாப்பது நிமிடம் யோசிப்பேன். இதில் ஓட வேண்டும். அலாரம் அடித்து எழுந்து ஓட ஆரம்பித்தால் மிகச்சரியாக நானூறு மீட்டரில் மூச்சு ஏற இறங்க வாங்கியது. இதயம் நொடிக்கு இரண்டாயிரம் முறை துடித்தது. கண்களும் லைட்டாய் இருட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் விடாமல் அடுத்தடுத்த நாட்களும் பள்ளிக்கரணையின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக நாட்கள் நகரத்தொடங்கியது. ஓடுவதை விட ஒவ்வொரு நாளும் காலையில் 5, 5.30 மணிக்கு எழுவது என்பது கடுமையான சவாலாக இருந்தது. "காலைலல்லாம் எந்திரிக்க முடியாது"ன்னு சொல்லி கல்யாணத்தையே பத்து மணி முகூர்த்தத்திற்கு வைக்கச் சொன்னவன். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனமும் பழக்கப்பட ஆரம்பித்தது. இரண்டு மூன்று என்று தொடர்ச்சியாக ஓடும் கிலோமீட்டர்களின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.
அப்பொழுதுதான் இணையத்தில் Dream Runnersன் அரை மராத்தான் ஓட்டத்தைப் பற்றியும் அதற்காக அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிற்சியைப் பற்றியும் தெரிய வந்தது. ஆனாலும் பயங்கர தயக்கம். என்னால் அங்கே பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஈடுகொடுத்து ஓட முடியுமா, எல்லாரும் ஏளனமாய்ப் பார்க்கக் கூடுமோ என்று. இருந்தாலும் ஏப்ரல் கடைசியில் ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு ரெஜிஸ்டர் செய்தேன். அவர்களே அழைத்து இனிமேல் வாராவாரம் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 4.55க்கு சோழிங்கநல்லூர் வந்துவிடச் சொன்னார்கள். அங்கு முதல் நாள் போனதுதான்... எவ்வளவு சரியான முடிவெடுத்தேன் என்று இப்பொழுது நினைத்தாலும் பூரிப்பாய் இருக்கிறது. ஓட்டமும் ஓட்டம் சார்ந்த இன்னபிற பயிற்சிகளும். சென்னையின் மிகத் தேறிய ஓட்டக்காரர்கள் பலரும் அங்கே வந்து என்னைப்போல் பல புதிதாக ஓட ஆரம்பிக்கும் பலருக்கும் மிகப் பொறுமையாக மோடிவேட் செய்யச்செய்ய... ஓட்டத்தின்பால் அளவிலா போதை வரத்துவங்கியது. Thank you So much OMR Dreamers and all the volunteers who helped us in transformation. https://www.facebook.com/groups/omrdreamers/
கொஞ்சம் கொஞ்சமாக ஓடி ஓடி 10 KM தடையில்லாமல் ஓடுமளவிற்கு வந்த பொழுது வலது கனுக்காலில் கடுமையான வலி. இரண்டரை வாரம் ஏதும் செய்யா ஓய்வு. மீண்டும் தேறி வந்து ஓட்டம்... ஓடி ஓடி 15 KMம் கொஞ்சம் வசப்பட்டது. ஆரம்பித்தலிருந்து முந்தாநாள் வரை ப்ராக்டிஸ் செய்த மொத்த தூரம் 425 கிலோமீட்டர்கள். ஆனால் தொடர்ச்சியாக 15க்கு மேல் ஓடியதில்லை. இதை வைத்துக்கொண்டுதான் இன்று DRHMன் அரை மரத்தான் ஓடி முடித்தேன். மிகச்சரியாக 21 KM ஓடிக் கடந்தது முடித்தது 2 மணி 53 நிமிடத்தில். 2.40 என்று மனதில் நினைத்திருந்தேன். முடிக்க முடியவில்லை. அதனாலென்ன. ஒரு நாள்... இரு நாளா.. வாழ்நாளும் இருக்கிறது ஓட...
smile emoticon